Our Feeds


Tuesday, March 17, 2026

Zameera

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்ககூடும்


 (இராஜதுரை ஹஷான்)


மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலைமை தீவிரமடைந்துள்ள பின்னணியில் அரிசியை தவிர்த்து ஏனைய அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை எதிர்வரும் மாதங்களில் உயர்வடையக்கூடும்.பண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக விற்பனை செய்வது தொடர்பில் 1977 என்ற இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறையிடலாம் என வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.


வர்த்தகத்துறை அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும்  தெரிவித்ததாவது,


மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய நிலைமையை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முகாமைத்துவ மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


எரிபொருள் விநியோகத்தை சிக்கனமாக பேணுவதற்கு எதிர்வரும் நாட்களில் வீட்டில் இருந்தவாறு வேலை செய்யும் முறைமை அமுல்படுத்தப்படலாம்.தற்போதைய இக்கட்டான நிலையில் அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும்.



 மத்திய கிழக்கு நாடுகளின் தற்பேதைய நெருக்கடியான நிலைமையினால் உருளைக்கிழங்கு, பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் எதிர்வரும் மாதங்களில் உயர்வடையக் கூடும். கப்பல் சேவை கட்டணம் மற்றும் காப்புறுதிக் கட்டணம் ஆகிய காரணிகளால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.


அரிசியின் விலை உயர்வடையாது. போதுமான அரிசி கையிருப்பில் உள்ளது. எதிர்வரும் பெரும்போக விளைச்சலில் அதிகளவான விளைச்சல் எதிர்பார்க்கப்படுகிறது.


எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோர் அதிகார சபை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளது. கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக பொருட்களை விற்பனை செய்தால் அது குறித்து பொதுமக்கள் 1977 என்ற விசேட இலக்கம் ஊடாக முறைப்பாடளிக்கலாம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »