Our Feeds


Saturday, March 28, 2026

SHAHNI RAMEES

இந்திய எரிபொருளுடன் கப்பல் கொழும்பை வந்தடைந்தது!

 


இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார

திசாநாயக்க ஆகியோருக்கிடையில் 2026 மார்ச் 24 ஆம் திகதி இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலைத் தொடர்ந்து, 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்ட கப்பல்  சனிக்கிழமை (28) கொழும்பை வந்தடைந்துள்ளது.


இந்த எரிபொருள் கப்பலில் 20,000 மெட்ரிக் தொன் டீசலும், 18,000 மெட்ரிக் தொன் பெற்றோலும் அடங்குகின்றன.



இதற்கு முன்னதாக, 2026 மார்ச் 23 ஆம் திகதி, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோருக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.Geographic Reference


மார்ச் மாதத்திற்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக  லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மத்திய கிழக்கு மற்றும் சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்திருந்தது.


எனினும், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக விநியோக தடைகள், கப்பல் பற்றாக்குறை போன்ற காரணங்களை முன்வைத்து, ஒப்பந்த நிறுவனங்கள் “Force Majeure” விதியை மேற்கோள் காட்டி எரிபொருள் வழங்க முடியாது என அறிவித்தன.



இதனையடுத்து, அவசர தேவைக்காக இந்தியாவின் Indian Oil Corporation (IOCL) நிறுவனத்திடம் இருந்து உதவி கோரப்பட்டது. அதன் ஒரு பகுதியாகவே இந்த 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் சரக்கு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


இந்திய அரசாங்கம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் மூலம் இலங்கையின் எரிபொருள் விநியோகத் தொடர்ச்சியை உறுதி செய்ய தேவையான ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், இந்த உதவி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.



இந்நிலையில், இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் அரசு மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »