Our Feeds


Thursday, March 5, 2026

Zameera

மத்திய கிழக்கு போர் தாக்கம்: அரசின் நடவடிக்கைகள் என்ன? – சஜித் கேள்வி


 (எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


மத்திய கிழக்குப் போர்ச்சூழல் நமது நாட்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற நிலையில்  இது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.


பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) நிலையியற் கட்டளை 27/2 கீழ்  கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உக்கிரமடைந்து வரும் மோதல் நிலைமைகளால் அந்த பிராந்தியங்களில் பாதுகாப்பு ஸ்திரமின்மைக்கு வழிவகுத்துள்ளதோடு, இன்று இப்பிராந்தியத்தில் மாத்திரமல்லாது உலகளாவிய ரீதியாக ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டில் தொழில் புரிவோர், விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதல், சுற்றுலாத் துறை, ஏற்றுமதி வர்த்தகம், நேரடி அந்நிய முதலீடு ஆகியவற்றைப் பாதிக்க வாய்ப்புள்ளமையினால் இது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள ஆயத்த மற்றும் நடவடிக்கைகளை தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு பின்வரும் கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உக்கிரமடைந்து வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ? நமது நாட்டினதும், போர்ச்சூழலால் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தாக்கம் தொடர்பில் அரசாங்கம் பின்பற்றும் கொள்கையை யாது?


சவுதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், கட்டார், குவைட், ஓமான், பஹ்ரைன், இஸ்ரேல் மற்றும் லெபனான் உள்ளிட்ட மேலும் பல நாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறு மத்திய கிழக்கில் தொழில்புரியும் இலங்கையர்களின் எண்ணிக்கை நாடு அடிப்படையில் தனித்தனியாக எவ்வளவு?


இந்த மோதல் பரவுதல் அல்லது உக்கிரமடைவதால் இலங்கையர்களின் உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குறித்த நாடுகளிலிருந்து இலங்கையர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற அமைச்சு வகுத்துள்ள விசேட வேலைத்திட்டம் யாது? பல நாடுகள் தற்போது இதுபோன்ற திட்டங்களை முன்னெடுத்து வருவதால், நமது நாடும் இதுபோன்ற திட்டத்தை வகுக்க வேண்டும்.


சம்பந்தப்பட்ட நாடுகளில் இலங்கை தூதரகங்களின் அவசரகால பதிலளிப்பு அலகுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா? 24 மணி நேர அவசர தொடர்பு சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா?



⁠விமானப் போக்குவரத்து இரத்தாதல் அல்லது வான் பரப்பு மூடப்பட்டதால் மத்திய கிழக்கு அல்லது ஏனைய நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் சிக்கி இருக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இவர்களின் பாதுகாப்புக்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை?


குறித்த நபர்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி, பாதுகாப்பு மற்றும் சட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட இலங்கை தூதரகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளனவா?


அவசர போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் விசேட விமான போக்குவரத்து அல்லது பிற போக்குவரத்து வழிமுறைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பாக அமைச்சு எடுத்துள்ள தீர்மானங்கள் யாவை?



விமான போக்குவரத்துகள் தடைபட்டுள்ள நாடுகள் தொடர்பாக சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் அல்லது தொடர்புடைய நாடுகளுடன் இணைந்து எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை?


மத்திய கிழக்கில் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக வெளிநாட்டு பணம் அனுப்புவதில் குறைவு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றனவா? இத்தகைய சூழ்நிலையை முகாமைத்துவம் செய்து கொள்வதற்கு அமைச்சால் வகுக்கப்பட்டுள்ள முன்னாயத்தத் திட்டங்கள் யாது?


ஒபெக்  அமைப்பு, மத்திய கிழக்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அல்லது எண்ணெய் உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு அல்லாத நாடுகளுடன் இலங்கை இருதரப்பு இராஜதந்திர உறவுகள் மூலம் நாட்டிற்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்து பேணிச் செல்வதை உறுதி செய்ய எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை?


ஹோர்முஸ் நீரிணை   வழியாக கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டால் மாற்று விநியோக வழிமுறைகள் தொடர்பாக இலங்கை அவதானம் செலுத்தியுள்ளதா?


உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பினால் இலங்கைக்கு ஏற்பட முடியுமான பொருளாதார தாக்கம் குறித்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் விசேட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டனவா ? இந்த கலந்துரையாடல்களின் முன்னேற்றங்கள் யாவை?


நமது நாடு குறுகிய காலத்தில்  நான்கு பெரும் துயர் சம்பவங்களுக்கு முகம் கொடுத்துள்ளது. இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் விசேட திட்டத்தின் மூலம் எரிபொருள் விலைகளை முகாமைத்துவம் செய்து கொள்ள வேண்டியுள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் எடுத்த குறிப்பிட்ட நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் அதனை சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.


ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய் கொண்டு வரப்படுகின்றது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், இந்த நாடுகளுக்குக் கூட ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே மசகு எண்ணெய் பெற்று வருகின்றது. இந்த விநியோகச் சங்கிலி குறித்து அரசாங்கம் தெளிவோடு இருக்க வேண்டும்.


இயற்கை எரிவாயு போக்குவரத்திற்கும் இடையூறுகள் ஏற்படுவதனால், இது நமது நாட்டை மறைமுகமாக பாதிக்கின்றன. இங்கு, கப்பல் காப்புறுதிக்கான விலை அதிகரிப்பது, கப்பல் வழித்தடங்கள் மாறுவது, தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்படுவதால், இது நுண் மற்றும் பேரின பொருளாதாரத்தையும் பாதிப்பதாக அமைகின்றன. ஆகையினால் அரசாங்கம் இந்த விடயத்திலும் பூரண தெளிவுடன் இருக்கவேண்டும்  என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »