Our Feeds


Wednesday, March 18, 2026

Zameera

லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரையும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரையும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஒருமாதிரியும் ஏனையவர்களுக்கு வேறு மாதிரியும் செயற்பட முடியாது. அத்துடன் நாட்டில் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியே இதற்கு காரணமாகும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல்  தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு  மேலும் உரையாற்றுகையில்,


அனைவரும் சட்டத்துக்கு கீழ் என ஜனாதிபதி தெரிவிக்கிறார். ஆனால் எரிசக்தி அமைச்சருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்  செய்யப்பட்டிருக்கும் முறைப்பாடு தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறாமல் அவருக்கு எதிராக மேல்நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தால், சம்பந்தப்பட்டவரை கைது செய்து, வாக்குமூலம் பெற்றுக்கொண்டே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். எரிசக்தி அமைச்சருக்கு அவ்வாறு எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. அப்படியானால் எரிசக்தி அமைச்சர் சட்டத்துக்கு மேலால் இருக்கிறாரா?


அதனால் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரயும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஒருமாதிரியும் ஏனையவர்களுக்கு வேறு மாத்திரியும் செயற்பட முடியாது. அதேபோன்று கொள்கலன் மோசடி குற்றச்சாட்டு, மன்னார் காற்றாலை மோசடி, அசிரி இறக்குமதி விலை மனு கோரலில் ஏற்பட்ட மோசடி போன்ற முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை. நிலக்கரி மோசடி தொடர்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் எந்த விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த நிலக்கரி மோசடியால் இதுவரை 8497 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



இதன் காரணமாக மின் உற்பத்தி குறைவடைந்துள்ளது. இந்த குறைபாட்டை மறைப்பதற்கு நாள் ஒன்றுக்கு 35இலட்சம் லீட்டர் டீசல் தேவைப்படுகிறது. வருடத்துக்கு 140 இலட்சம் லீட்டர்  தேவைப்படுகிறது. எரிபொருளுக்கு வரிசையில் இருக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டுவரும் டீசலையே அரசாங்கம் மின்சார சபைக்கு வழங்குகிறது. அரசாங்கம் செய்த தவறினாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல், ஜுன், ஜூலை மாதங்களில் மின்சார துண்டிப்பு மேற்காெள்ள வேண்டிவரும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியே இதற்கு காரணமாகும் அதனால் அரசாங்கமே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.


அத்துடன்ஙங தரம்குறைந்த நிலக்கரி கொண்டுவந்தமைக்காக மின்சக்தி அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரம் சமர்ப்பக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அரசாங்கம் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை அந்த அமைச்சில் வைத்திருக்கிறது. வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி தொடர்பில் கதைக்கும் அரசாங்கம், அவர்களில் ஒருவருக்கு எவ்வாறான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும்போது அனைவரும் அவரை பாதுகாக்கவே முயற்சிக்கின்றனர் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »