Our Feeds


Saturday, March 14, 2026

SHAHNI RAMEES

மத்திய கிழக்கு பதற்றம் உலக அமைதிக்கு அச்சுறுத்தல்! - ஐ.நா. செயலாளர்

 


மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல்

உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் அனைத்து தரப்பினரும் பதற்றத்தை குறைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வர வேண்டும் எனவும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.


ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.



இந்த நிலையில், பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள முக்கியமான கடல் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Hormuz Strait) ஈரான் மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. அரபு நாடுகளில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் கப்பல்கள் பெரும்பாலும் இந்த கடல் பாதையிலேயே பயணித்து வருகின்றன.


உலகளவில் சுமார் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறும் முக்கியமான கடல் பாதையாக ஹோர்முஸ் நீரிணை கருதப்படுகிறது. இதனால், இந்த கடல் வழித்தடம் மூடப்பட்டிருப்பது உலக பொருளாதாரத்துக்கும் எரிசக்தி விநியோகத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


அத்துடன், இந்த கடல் பாதையில் பயணிக்கும் வணிக கப்பல்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இந்தியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தாய்லாந்து கப்பல் உள்ளிட்ட மூன்று வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்த நிலைமை குறித்து கவலை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வளைகுடா நாடுகளில் விரிவடைந்து வரும் மோதல்கள் பொதுமக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.


மேலும், மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அனைத்து தரப்பினரும் பதற்றத்தை குறைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வர வேண்டும் எனவும் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »