ஈரானின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஈரானின் புஷேர் மாகாணத்தில் உள்ள அசலூர் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயலாகக் கருதப்படும் சௌத் பார்ஸ் எரிவாயு வயலின் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், சௌத் பார்ஸ் எரிவாயு வயலில் அமைந்திருந்த ஒரு எரிவாயு கிடங்கு மற்றும் சுத்தகரிப்பு நிலையம் ஆகியவைச் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரானின் எரிவாயு வயலின் மீதான இந்தத் தாக்குதல், மிகவும் ஆபத்தானது எனவும், உலகின் எரிசக்தி பாதுகாப்பிற்குக் கடும் அச்சுறுத்தல் எனவும் குறிப்பிட்டு கட்டார் அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலின் தாக்குதலில் அங்கு பரவிய தீயை ஈரானின் தீயணைப்புப் படையினர் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் எவருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் அந்நாட்டின் உயர்தலைவர் கொல்லப்பட்டார்
இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
