Our Feeds


Saturday, March 14, 2026

Zameera

யுத்தம் முடிந்தவுடன் எரிபொருள் விலை குறைக்கப்படும்


 உலகில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலையை, அந்தப் போர்ச் சூழல் முடிவுக்கு வந்த முதல் கணத்திலேயே மீண்டும் குறைத்து அதன் சலுகைகளை மக்களுக்கு வழங்க அரசாங்கம் உறுதியளிப்பதாக பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

இது ஒரு நிரந்தர விலை உயர்வு அல்ல என்றும், எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் மக்களைக் கைவிடாத மக்கள் அரசாங்கமே தற்போது செயற்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

எரிபொருள் வரிசைகள் குறித்து வீணான அச்சம் கொண்டு பதற்றமடைய வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொண்ட அமைச்சர், மிகவும் புத்திசாலித்தனமாகவும் கூட்டாகவும் அரசாங்கத்துடன் இணைந்து இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

உலக அரசியல் நிலவரங்களால் சில பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என்றாலும், அரசாங்கம் எப்போதும் மக்களின் பக்கம் நின்று சலுகைகளை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்

இவ்வாறான உலகளாவிய நெருக்கடிகளை வலுவான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், அதற்காக கிராம மட்டத்தில் தொழில்துறைகளை மேம்படுத்தும் திட்டங்கள் ஊடாக தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்வது முக்கியம் எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் கருவூலம் பலமடைந்து வருவதாகவும், அரசாங்கம் பொருளாதார ரீதியாக வலுப்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாடாளுமன்றத்தில் 159 என்ற பலமான பெரும்பான்மையைக் கொண்ட இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது என்றும், எதிர்வரும் நான்கு ஆண்டு காலப்பகுதியில் வலுவான தலைமையின் கீழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் டி.பி. சரத் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »