Our Feeds


Saturday, April 18, 2026

Zameera

மத்திய கிழக்கு மோதல்களால் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் வறுமைக்குள் விழும் அபாயத்தில் 8.8 மில்லியன் மக்கள் - ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம்


 (நா.தனுஜா)


அண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட இராணுவ மோதல்களின் விளைவாக ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்கள் கடுமையான சமூக மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றன. குறிப்பாக 8.8 மில்லியன் மக்கள் வறுமையால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதுடன், 97 பில்லியன் டொலர் - 299 பில்லியன் டொலர் வரையான உற்பத்தி இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடாத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்த மோதல்களின் விளைவாக ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியம் முகங்கொடுத்திருக்கும் பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அமைப்பான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:


அண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட இராணுவ மோதல்களின் விளைவாக ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்கள் கடுமையான சமூக மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றன. ஒரு தற்காலிக போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ள போதிலும் எரிபொருள், வர்த்தகம் மற்றும் தொழிலாளர் சந்தைகளில் தொடர்ந்து நிலவும் தளம்பல்களால் வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் சமூகப்பாதுகாப்பு என்பன பெருமளவுக்கு சிதைவடைந்து வருகின்றன.



இந்நெருக்கடியினால் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் சுமார் 8.8 மில்லியன் மக்கள் வறுமையால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதுடன் குறிப்பாக பெண்கள், குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் சிறு வணிக உரிமையாளர்கள் ஆகியோர் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். அதேபோன்று மத்திய கிழக்கு மோதல்களால் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் 97 பில்லியன் டொலர் - 299 பில்லியன் டொலர் வரையான உற்பத்தி இழப்புக்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதுடன், இது பிராந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 - 0.8 சதவீதத்துக்குச் சமமானதாகும்.


எரிபொருள் மற்றும் சரக்குக்கப்பல் கட்டண உயர்வு என்பன மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்பட்ட உடனடிப் பாதிப்பாகக் காணப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணை ஊடாகக் கொண்டுசெல்லப்படும் மசகு எண்ணெய் மற்றும் திரவ எரிவாயு என்பவற்றில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவை ஆசிய சந்தைகளுக்கென ஒதுக்கப்படுவதனால், தற்போது அவற்றில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் போக்குவரத்து, மின்சாரம், உணவு மற்றும் உரம் ஆகியவற்றின் கட்டணங்கள் மற்றும் விலைகளில் உடனடியாகப் பிரதிபலிக்கிறது.  


தெற்காசியப் பிராந்தியத்தில் வருமானம் மற்றும் விலைகள் மீதான தாக்கங்கள் உயர்வாக இருப்பதனாலும், கொள்கை ரீதியிலான போதிய பாதுகாப்பு இல்லாததனாலும் மத்திய கிழக்கு நெருக்கடியினால் ஏற்பட்ட இழப்புக்கள் உயர்வாக உள்ளன. இருப்பினும் ஒப்பீட்டளவில் நோக்குகையில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பின்னடைவுகளே பதிவாகியுள்ளன என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »