Our Feeds


Thursday, April 9, 2026

Zameera

வடக்கு ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, யாழ்ப்பாணம் நகரங்களுக்கு இடையிலான ரயில் மற்றும் யாழ்ப்பாண இரவு நேர தபால் ரயில் ஆகியன இன்று முதலும், யாழ் தேவி ரயில் நாளை முதலும் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

அண்மையில் நாட்டைத் தாக்கிய "டித்வா" புயல் காரணமாக வடக்கு ரயில் பாதையின் 14 இடங்கள் சேதமடைந்திருந்தன. அந்த இடங்கள் தற்காலிகமாக சீர்செய்யப்பட்ட பின், கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி முதல் வேகக் கட்டுப்பாடுகளுடன் சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. 

எனினும், ஜனவரி 19 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது சேதமடைந்த 14 இடங்களும் நிரந்தரமாக புனரமைக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவைகளை வழமை போன்று முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »