Our Feeds


Friday, May 22, 2026

Admin

அதிகூடிய மூலதனச் செலவைக் கொண்ட ஆண்டாக 2027 ஆம் ஆண்டு மாற்றப்படும் - ஜனாதிபதி!



இலங்கை வரலாற்றில் அதிகூடிய மூலதனச் செலவைக் கொண்ட ஆண்டாக 2027 ஆம் ஆண்டை மாற்றி, மூலதனச் செலவாக 2,000 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

 1,744.85 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (22) முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அம்பாறை நகர சபைக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் மக்களின் வசதிகளை மேம்படுத்துவதுடன், வர்த்தக சமூகம் ஒரு சட்டப்பூர்வமான மற்றும் முறையான இடத்தில் தமது வியாபாரங்களை அபிவிருத்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதும், அம்பாறை மாவட்ட மக்களின் கலாசார வாழ்க்கையை மேம்படுத்துவதுமே இதன் நோக்கங்களாகும். 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் இருந்த மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் இந்த பலநோக்கு கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடனான அரங்கு, வர்த்தக வளாகம், அலுவலக வளாகம் மற்றும் பாரிய அளவிலான வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பலநோக்கு கட்டிட வளாகத்தின் நிர்மாணப் பணிகள், 2028.12.31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

பல வருடங்களாக அம்பாறை நகர சபையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் அங்கு தொழிலாளராகப் பணியாற்றிவரும் ஈ. டி. ஹேமச்சந்திரவும் இந்நிகழ்வில் ஒரு அதிதியாகக் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அம்பாறை மாவட்டத்தின் வீதிகள், பாலங்கள், கால்வாய்கள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக 2026ஆம் ஆண்டிற்கு 22,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்த நிதி ஒதுக்கீடுகளை 2026 நிதி ஆண்டிற்குள்ளேயே முறையாகப் பயன்படுத்தி, மக்களுக்கு விரைவாகப் பலன்களை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »