Our Feeds


Tuesday, May 26, 2026

Zameera

சீரற்ற காலநிலையால் 31,000க்கும் அதிகமானோர் பாதிப்பு


 (எம்.மனோசித்ரா)


நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 7,984 குடும்பங்களைச் சேர்ந்த 31,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது.


பாதிப்புக்கள்


இரத்தினபுரி, காலி, திருகோணமலை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வவுனியா ஆகிய 8 மாவட்டங்களே சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த மாவட்டங்களில் பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட 7,984 குடும்பங்களைச் சேர்ந்த 31,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளதோடு, நாடு முழுவதும் 860 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.Travel Guides & Travelogues


அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்போது அமைக்கப்பட்டுள்ள 18 தற்காலிகப் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 446 குடும்பங்களைச் சேர்ந்த 1,724 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


மண்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள்


நிலவி வரும் கடும் மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி, அயகம, எஹெலியகொட மற்றும் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் மட்ட செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை, தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல ஆகிய பகுதிகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரிஎல்ல, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத, கலவானை மற்றும் கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, பாதுக்க ஆகிய பகுதிகளுக்கும் முதலாம் மட்ட மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களு மற்றும் களனி கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால், அவற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


காலநிலை முன்னறிவித்தல்


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வட-மத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், இடிமின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »