Our Feeds


Wednesday, May 27, 2026

Zameera

எந்நாட்டின் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், எமது சுய கௌரவத்தைப் பாதுகாத்து சுயாதிபத்தியத்துடன் முடிவுகளை எடுக்கவேண்டும்


 (க.சிவலிங்கமூர்த்தி)


நாம் அணிசேராக் கொள்கை பற்றிப் பேசினாலும், எதிர்காலத்துக்கு 'பல்தரப்பு கொள்கை' ஒன்றையே நாம் உருவாக்க வேண்டும். அதாவது, அனைத்து நாடுகளுடனும் இணக்கமாகச் செயற்பட வேண்டும், அதேவேளை எந்நாட்டின் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், எமது சுய கௌரவத்தைப் பாதுகாத்து சுயாதிபத்தியத்துடன் முடிவுகளை எடுக்க வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம்.அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.


முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எழுதிய 'எக்கட கெடும' (ஒன்றுகூடிய மோதல்)  எனும் நூல் வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


இன்றைய நவீன உலகில், ஒரு நாடு தனித்து இயங்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். யானைகள் சண்டையிடும்போது, கீழே இருக்கும் புற்களே நசுங்கும் என்பது போல, நமக்கு எவ்விதத் தொடர்புமற்ற மத்திய கிழக்கு நாடுகளின் மோதல்கள், எமது நாட்டின் டொலர் கையிருப்பில் பாரிய தாக்கத்தைச் செலுத்துகின்றன. எரிபொருள் இறக்குமதி, ஏற்றுமதிச் சிக்கல்கள் மற்றும் அந்நியச் செலாவணி வருமானம்  குறைவடைதல் என நாட்டின் ஒவ்வொரு மர்மஸ்தானத்திலும் இந்த சர்வதேசப் பாதிப்புகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


ஒரு நாட்டின் வெற்றிகரமான நிர்வாகத்துக்கு தீர்க்கதரிசனமும், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களும் அவசியம். 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை நாம் வென்றபோது, எமது வீரர்களிடம் இருந்த நுணுக்கமான திட்டமிடல் மற்றும் களவியூகமே வெற்றியைத் தந்தது. அதேபோல, 2022 இல் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த முடியாது என்ற மிகக் கடினமான, ஆனால் தவிர்க்க முடியாத தீர்மானத்தை நாம் எடுத்தோம். உயிர் வாழ்ந்தால் மாத்திரமே கடனை மீளச் செலுத்த முடியும் என்ற தர்க்கத்தின் அடிப்படையிலேயே அது அமைந்தது.


தற்போதைய உலக அரசியலில், ஒரு நாடு மற்றுமொரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையின் நீட்சியாக செயற்படக்கூடாது. இது மிகவும் அபாயகரமானது. நாம் 'அணிசேராக் கொள்கை' பற்றிப் பேசினாலும், எதிர்காலத்துக்கு 'பல்தரப்பு கொள்கை' ஒன்றையே நாம் உருவாக்க வேண்டும். அதாவது, அனைத்து நாடுகளுடனும் இணக்கமாகச் செயற்பட வேண்டும், அதேவேளை எந்நாட்டின் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், எமது சுய கௌரவத்தைப் பாதுகாத்து சுயாதிபத்தியத்துடன் முடிவுகளை எடுக்க வேண்டும்.


அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதற்கு, அவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு  முன்னுரிமை அளிப்பதே முக்கிய காரணமாகும். அதேபோல, இலங்கை போன்ற சிறிய நாடுகள், பொருளாதாரம், வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு மற்றும் அரச நிர்வாகம் ஆகிய நான்கு துறைகளிலும் சிறந்த நிபுணர்களைக் கொண்டு நாட்டை வழிநடத்த வேண்டும். இந்தியாவின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர், அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதாலேயே அந்த நாடுகள் வெற்றிகரமாகச் செயற்படுகின்றன.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள், தனது நூலின் ஊடாக இவ்வாறான ஆழமான சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் கருத்துகளை எளிய விதத்தில் மக்களிடம் கொண்டு சென்றுள்ளார்.இவ்வாறான தரவுகள் சார்ந்த கொள்கைத் திட்டங்களே நாட்டின் எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »