Our Feeds


Thursday, May 21, 2026

Sri Lanka

இஸ்ரேலின் பிடியிலுள்ள சமீரா மஹ்பூப்தீனை விடுவிக்க ராஜதந்திர ஏற்பாடுகள் அவசியம் - வௌிவிவகார அமைச்சருக்கு ரிஷாட் எம்.பி.கடிதம்


இஸ்ரேலிய படைகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சமீரா மஹ்பூப்டீனின் எதிர்காலத்தில்  கூடுதல் கவனமெடுத்து, அவரை விடுவிப்பதற்கான ராஜதந்திர நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வௌிவிவகார அமைச்சர் விஜித்த  ஹேரத்தின் கவனத்துக்கு இவ்விடயத்தை கொண்டு வந்துள்ள அவர், இது குறித்து கடிதம்  ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளதாவது

காசாவுக்கான மனிதாபிமான உதவிகளுடன் துருக்கியிலிருந்து புறப்பட்ட படகுகளை  இஸ்ரேல்  கைப்பற்றி, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளது.

இந்தப் படகுகளில், எமது நாட்டைச் சேர்ந்த பெண்மணியும் உள்ளார். சுமார் 45 நாடுகளிலிருந்து  நானூறு மனிதாபிமான பணியாளர்கள் இப்படகுகளில் பயணித்திருந்தனர். மனிதாபிமானம் மற்றும் அமைதியான நோக்குகளுடன் மாத்திரமே இவர்கள் காசாவுக்கு புறப்பட்டனர். எவ்வித அசம்பாவித நோக்கங்களுமின்றி   பயணித்த இந்தப் படகுகள் காசாவிலிருந்து 250 கிலோமீற்றர்  தூரத்திலான கடற்பரப்பில், இடைமறிக்கப்பட்டன.

இவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், இதுவரைக்கும் எவ்வித தகவல்களையும் வௌியிடவில்லை. எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியாதுள்ளது. இதனால், இவர்களுக்கு ஏற்படவுள்ள பாரதூர  விளைவுகள் வௌிச்சத்துக்கு வந்துள்ளன. 

எமது  நாட்டைச் சேர்ந்த மனிதாபிமானப் பணியாளரான சமீரா மஹ்பூப்டீனின் எதிர்காலம் குறித்து எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இவரைத் தொடர்புகொள்வதற்கான எந்த வசதிகளும் இதுவரை செய்யப்படவில்லை. எனவே, சட்டரீதியான ஏற்பாடுகளுடன்  சமீரா மஹ்பூப்டீனை விடுவிப்பதற்கான ராஜதந்திர செயற்பாடுகளில்  அரசாங்கம் அவசரமாக ஈடுபட வேண்டும்.

இஸ்ரேலின் இவ்வாறான செயற்பாடுகள், மனிதாபிமானத்துக்கே கேடாக அமைந்துள்ளது. அமைதிச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது, மனிதாபிமானத்தை மலினப்படுத்துவதாகவே அமையும். இவ்வாறு ரிஷாட்பதியுதீன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »