நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அடித்தளமே இந்த மேதின கூட்டம். எதிர்கால அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பமாகும். அதனால் சவால்களை எதிர்கொண்டு சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்நை ஏற்படுத்தும்வரை நாங்கள் ஓயப்போவதில்லை என சிறிலங்கா சுதந்திர கட்சின் சிரேஷ்ட உபதலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியி்ன் மேதின கூட்டம் வெள்ளிக்கிழமை (1) பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
140ஆவது சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில் இலங்கையில் 70ஆவது மேதின நிகழ்வை கொண்டாடிவருகிறோம். மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் என்பதால், அந்த தினத்தை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியது எமது கட்சியின் தலைவர் எஸ்.டபிள்யூஆர்.டி பண்டாரநாயக்கவாகும். சிறிலங்கா சுதந்திர கட்சி தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக அமைக்கப்பட்ட கட்சியாகும். அதனால் இந்த கட்சியை யாராலும் விழுத்த முடியாது. விழும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் எழுவோம்
1978ல் ஜேஆர். நிறைவேற்று ஜனாதிபதி ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தியதும் விகிதாரசா தேர்தல் முறையை கொண்டுவந்ததும் சிறிலங்கா சுதந்திர கட்சியை வீழ்த்துவதற்காகும். இறுதியாக சிறிமா அம்மையாரின் குடியுரிமையை இல்லாமல் செய்து சுதந்திர கட்சியை அழிக்க முயற்சித்தார்கள். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கட்சியின் பலமான ஆதரவாளர்களின் உறுதியே இதற்கு காரணமாகும்.
1994இல் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் ஏகாதிபத்திய அரசாங்கத்தை வீழ்த்தி, ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் 32 வருடங்களாக அன்றுமுதல் இன்றுவரை எந்த அரசியல் கட்சிக்கும் தனித்து ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஒன்றை சரியாக வெற்றிகொள்ள முடியவில்லை.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பொய் பிரசாரங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். இந்த அரசாங்கத்தின் வாக்குறுதிகள் மீது மக்கள் பாரியளவில் நம்பினார்கள். தற்போது ஏமாற்றமடைந்துள்ள மக்கள் எந்த பக்கம் செல்வதென அறியாமல் இருக்கும் நிலையில், இவ்வாறான நேரத்திலே சிறிலங்கா சுதந்திர கட்சி மக்களுக்கு தேவைப்படுகிறது. அதேநேரம் கெம்பல் மைதானத்தில் கூடியிருக்கும் இது சாதாரண மேதின கூட்டம் என நினைக்க வேண்டாம்.இது எதிர்கால அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பமாகும்.
இந்த கூட்டம் பொது மக்களுக்கான வரலாற்று கூட்டமாகும். இந்த கூட்டத்துடன் சுதந்திர கட்சியின் கிளைக் காரியாலயங்கள் மாவட்ட காரியாலயங்கள் அமைக்கப்படும், இவ்வாறு சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கும்வரை நாங்கள் ஓயப்போவதில்லை. இதனை நாங்கள் உறுதியாக தெரிவித்திருக்கிறோம். ஏனெனில் எங்களுக்கு அரசாங்கம் அமைத்த அனுவமும் இருக்கிறது. அரசாங்கங்களை வீழ்த்திய அனுபவமும் இருக்கிறது.
அன்று தொழிலாளர்கள் 8 மணிநேர வேலை கோரியே போராட்டம் மேற்கொண்டனர். ஆனால் இன்று எமது மக்கள் வாழ்வதற்கான உரிமையை கோரியே போராட்டம் மேற்கொள்கிறார்கள். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 18 மாதங்களில் ஒருவட்சத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன.சாதாரண வியாபாரிக்கு வியாபாரம் செய்ய முடியவில்லை. சுயதொழில் செய்பவர்களுக்கு அவர்களின் தொழிலை செய்ய முடியாமல் இருக்கிறது. விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய உரம் இல்லை. இதற்கு பொறுப்புக்கூற நாட்டில் ஆட்சியாளர்கள் யாரும் இல்லை.
நாட்டு மக்களிடம் அறவிடப்படும் வரிகள் திறைசேரியில் சேர்க்கப்பட்டுவரும் நிலையில் தற்போது திறைசேரியில் இருந்த 2.5 மில்லியன் டொலர் காணாமல்போயுள்ளது. வரலாற்றில் ஒருபோதும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதில்லை. கடந்த கால அரசாங்கங்களில் பல்வேறு திருடர்கள் இருந்தார்கள். ஆனால் யாரும் திறைசேரியில் இருந்த பணத்தை கொள்ளையடிக்கவில்லை. ஊழல் மோசடி தொடர்பில் கதைக்கின்றனர். ஆனால் ஊழல் மாேசடிக்கு எதிரான கட்சி சிறிலங்கா சுதந்திர கட்சியாகும். அதனால் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டு, நாட்டை முன்னேற்றும் பாரிய சவால் ஒன்று எங்களுக்கு இருக்கிறது. அதனால் இந்த சவால்களை வெற்றிகொள்ளும் சக்தி எங்களுக்கு இருக்கிறது.
எனவே இந்த அரசாங்கம் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. அதேநேரம் கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து, கல்வித்துறையை வீழ்ச்சியடையச் செய்திருக்கிறது. அதனால் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் நாங்கள் ஒன்றுபட்டு இந்த மாற்றத்தை ஏற்படுத்த அணிதிறளவேண்டும் என்றார்.
