Our Feeds


Wednesday, May 13, 2026

SHAHNI RAMEES

மண்சரிவு அபாயங்கள் தொடர்பில் விழிப்புடன் இருங்கள்! - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்து !

 

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையினால் மண்சரிவு ஏற்படுவதற்கான  ஆரம்ப அறிகுறிகள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதனால், அபாய வலயங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைக் கடுமையாகப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்  பின்வரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது:

மழைநீர் தடையின்றி விரைவாக வெளியேறுவதை உறுதி செய்ய, வீடுகளைச் சூழவுள்ள வடிகால் அமைப்புகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

குடியிருப்புப் பகுதிகளுக்கு மேலாக அமைந்துள்ள பெரிய மரங்கள் அல்லது ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களை முடிந்தவரை அகற்றிவிட வேண்டும்.


வீடுகளுக்குப் பின்னால் உள்ள உயர்ந்த திட்டுக்களின் மேல் மழைநீர் பாய்வதைத் தவிர்க்கப் பாதுகாப்பு வடிகால்களை அமைக்க வேண்டும். கூரைகளிலிருந்து விழும் மழைநீர் முறையாக திசைதிருப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிலத்தில் ஏற்படும் வெடிப்புகள், மரங்கள் அல்லது மின்கம்பங்கள் சாய்வடைதல், திடீரென நீரூற்றுகள் தோன்றுதல் போன்ற ஆரம்பகட்ட அறிகுறிகள் குறித்துத் தொடர்ச்சியாக விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நிலமைகள் தென்பட்டால், உடனடியாக கிராம சேவகர் அல்லது உரிய அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அவசர நிலை ஏற்பட்டால், தாமதிக்காமல் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதுடன், அண்டை வீட்டாருக்கும் அறிவித்து அதிகாரிகளுக்குத் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »