Our Feeds


Saturday, May 9, 2026

Zameera

யாழ். போதனா வைத்தியசாலையில் திடீர் தீ விபத்து : பல மில்லியன் ரூபாய் இழப்பு!


 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (9)அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ பரவல், சுமார் 5 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 


அதிகாலை வேளையில் மருந்து களஞ்சியப் பகுதியில் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை அவதானித்த வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாகத் தீயை அணைக்க முயற்சித்தனர். 


தொடர்ந்து யாழ். மாநகர சபை தீயணைப்புப் படையினர், இராணுவத்தினர், விமானப் படையினர், பொலிஸார் மற்றும் மின்சார சபையினர் எனப் பல தரப்பினரும் ஒன்றிணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னரே தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 


மருந்து களஞ்சியசாலைக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய அமிலங்கள் (Acid) மற்றும் மருந்துகள் காணப்பட்டமையால் தீ மிக வேகமாகப் பரவியுள்ளது. 


இதன் காரணமாகப் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன. அத்துடன், மருந்து களஞ்சியசாலைக் கட்டடமும் பாரிய அளவில் சேதமடைந்துள்ளது. தற்போது தீ அணைக்கப்பட்டுள்ள நிலையில், களஞ்சியசாலையைச் சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


குறித்த களஞ்சியப் பகுதியில் மருந்துகளைப் பாதுகாப்பாக வைப்பதற்காக அண்மையில் குளிரூட்டப்பட்ட அறை (Cool Room) ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் ஏற்பட்ட மின் கசிவே இந்தத் தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. 


இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


-யாழ். நிருபர் பிரதீபன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »