கொழும்பு - மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற பணியாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை மயக்கமடையச் செய்து, சுமார் 12 பவுன் தங்க நகைகளைத் திருடிச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தெமட்டகொட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.City & Local Guides
நண்பகல் நேரம் வீடொன்றினுள் நுழைந்த பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கொண்ட குழுவொன்று இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாளிகாவத்தை, தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வியாழக்கிழமை (21) அன்று இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. உடல் நலக்குறைவுடன் இருந்த நபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வீட்டில் இருந்தபோது, கர்ப்பிணிப் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடொன்றினை வாடகைக்குப் பெற்றுக்கொள்ள வந்துள்ளதாகவும், தரகர் மற்றும் உரிமையாளர் வரும் வரை காத்திருப்பதாகத் தெரிவித்து வீட்டினுள் இருவரும் வந்துள்ளனர்.
இந்நிலையில் தண்ணீர் வாங்கி அருந்திவிட்டு, அவர்களுடன் சகஜமாகக் கலந்துரையாடிக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் தரகர், உரிமையாளர் எனத் தெரிவித்துக்கொண்டு இருவர் வீட்டினுள் நுழைந்து, கதவு மற்றும் ஜன்னல்களைப் பூட்டிவிட்டு, அவர்களை மயக்கமருந்து தடவப்பட்ட துணித்துண்டொன்றைக் கொண்டு மயக்கமடையச் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டிலிருந்த நகைகளையும் திருடி அங்கிருந்து குறித்த குழுவினர் தப்பிச் சென்றுள்ளனர்.
மேற்படி குழு சுமார் 12 பவுன் தங்க நகைகளைத் திருடிச்சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு அருகிலிருந்த சிசிடிவி கமராக்களை ஆய்வு செய்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். இந்நிலையில் தப்பியோடிய ஏனைய சந்தேகநபர்கள் மற்றும் திருடப்பட்ட நகைகளை மீட்பதற்கான மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
