Our Feeds


Saturday, May 16, 2026

Zameera

தோட்ட மக்களின் காணி உரிமை உறுதி செய்ய வேண்டும் - கணபதி கனகராஜ்






 தோட்ட குடியிருப்பு பிரதேசங்களின் உரிமை தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதை தோட்ட நிர்வாகங்களில் கட்டுப்பாட்டில் இருந்து முற்றாக விடுவிக்க வேண்டும் அவ்வாறு நடந்தால் மட்டுமே தோட்ட குடியிருப்பாளரின் காணி உரிமைக்கு அர்த்த புஷ்டியான ஆரம்பத்தை ஏற்படுத்த முடியும். என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.




மலையக பெருந்தோட்டங்களில் காணப்படுகின்ற காணிகளை பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். அதேபோல தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் வாழுகின்ற குடியிருப்பாளர்கள் பல்வேறு வகையில் அடையாளப்படுத்தப்படுகின்றனர். அதாவது தோட்டக்காணிகளில் ஒரு பகுதி பெருந்தோட்ட பயிர்கள் பயிரிடப்பட்டதாகவும் மற்றைய காணிகள் தரிசு நிலங்களாகவும், ஒரு சிறு பகுதி தோட்ட குடியிருப்பாளர்களின் விவசாய மற்றும் கால்நடைகளுக்கான புத்தரைகளாகவும் காணப்படுகின்றன. இதே போல தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் தோட்ட கம்பனிகளின் கீழ் வேலை செய்கின்ற நிரந்தர மற்றும் கம்பனிகளினால் பல்வேறு வகையாக வகைப்படுத்தப்பட்டு டிருக்கின்ற தொழிலாளர்களின் குடியிருப்புகள், தோட்ட கம்பனிகளின் கீழ் வேலை செய்யாதவர்களின் குடியிருப்புகள். என்ற வகையில் காணப்படுகின்றன. இவற்றுள் தோட்டத்தில் வேலை செய்கின்றவர்களைத் தவிர ஏனைய குடியிருப்பாளர்கள் தோட்ட கம்பனிகளினால் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடாத்தப்படுவதுடன் இவர்களின் எவ்வித அடிப்படைத் தேவைகளுக்கும் கம்பனிகள் இடங் கொடுப்பதில்லை. இதைத் தவிர தற்காலிக குடில்களில் வசிப்பவர்கள் என்ற இன்னொரு வகை குடியிருப்பார்களும் தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் குடியிருப்பு பிரதேசங்களில் காணப்படுகின்ற வழிபாட்டுத் தலங்கள் மைதானங்கள் சன சமூக நிலையங்கள் போன்ற பொது நிறுவனங்களின் முழுமையான கட்டுப்பாடும் தோட்ட கம்பனிகளின் பிடியில் இருக்கின்றன.




தற்போது மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பாக பலமான கோஷங்கள் வெளிப்பட்டு வருகின்றன. இது காணி உரிமை தொடர்பான மிக ஆரோக்கியமான விடயமாக காணப்படுகிறது. எனினும் நாம் பெருந்தோட்ட கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற எந்த காணிக்கான உரிமையை கேட்கின்றோம்? எவ்வளவு காணிகளை கேட்கின்றோம்? தோட்டக் குடியிருப்பு பிரதேசங்களில் வாழ்கின்ற சகல குடியிருப்பாளர்களையும் எவ்வாறு உள்ளடக்க போகிறோம் என்பனவற்றில் தெளிவில்லாத ஒரு குழப்ப நிலை காணப்படுகிறது. அரசாங்கமும் தோட்ட கம்பனிகளும் தோட்டங்களில் வேலை செய்கின்ற நிரந்தர தொழிலாளர்கள் மட்டுமே தோட்ட குடியிருப்பாளர்கள் என்று வரையறுக்க முற்படுகின்றன. இந்நிலையில் நாம் அதிகார தரப்பிடம் எவ்வாறான நிலைப்பாட்டை முன் வைப்பது என்பது தொடர்பான ஒரு பொதுவான ஒருமைப்பாட்டுக்கு வர வேண்டியது நமது முதலாவது பணியாக இருக்க வேண்டும். 




தற்போதைய ஜனாதிபதி தேர்தல் காலங்களில் 200 வருடங்களாக இந்த நாட்டின் பொருளாதாரத்துக்காக உழைத்த மக்களுக்கு ஒரு துண்டு காணியை கொடுக்கக் கூடாதா? என கேள்வி எழுப்பினார். ஆனால் அவர் பதவிக்கு வந்த பின் நடந்த நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தோட்ட குடியிருப்பாளர்களின் காணி தொடர்பான கேள்விக்கு ஒன்பது லட்சம் பேச் காணி எவ்வாறு வழங்க முடியும்? என ஜனாதிபதியே கேள்வி கேட்கிறார். இது இந்த நாட்டின் எல்லாத் தலைவர்களின் பொதுவான நிலைப்பாடு இதற்கு தற்போதைய ஜனாதிபதி விதிவிலக்கானவர் அல்ல என்பதை நாம் உணர வேண்டும். 




எனவே நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடியதாகவும் அதே நேரத்தில் அதிகாரத் தரப்பினரை அதை ஏற்றுக்கொள்ள செய்வதாகவும் அமைய வேண்டும். தற்போது பெருந்தோட்டங்களில் தோட்ட முகாமைக்கும், மக்களுக்கும் ஏற்படுகின்ற பெரும்பாலான பிரச்சனைகள், அசம்பாவிதங்கள், மோதல்கள் ,கருத்து வேறுபாடுகள் போன்றவை தோட்ட குடியிருப்பை மையமாக வைத்தே ஏற்படுகின்றன. இதற்கு அப்பாவி மக்களின் பிரச்சனைகளை சரியாக விளங்கிக் கொள்ளாத தோட்ட முகாமையாளர்களின் அடாவடித்தனமும் அடக்கு முறையும் மேலோங்கி இருப்பதே காரணமாகும். பெருந்தோட்ட கம்பனிகள் உற்பத்தி, விற்பனை, லாபமிட்டல் போன்ற விடயங்களில் ஈடுபடுவது முக்கியமானதாகும். அதை விடுத்து வீடுகளை உடைப்பது, தோட்டங்களில் வேலை செய்யாத குடியிருப்பாளர்களை அச்சுறுத்துவது, குடியிருப்பாளர்களை தோட்டங்களில் இருந்து வெளியேற்றுவது போன்ற அனாவசிய நடவடிக்கைகள் அவர்களுக்கு தேவையற்றது. நம்மால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. பெருந்தோட்ட முகாமையாளர்களின் இந்த நடவடிக்கையை முடிவுருத்த ஒரே வழி அவர்களின் குத்தகை கால ஒப்பந்த முடியும் வரை அவர்களின் நடவடிக்கைகளை தோட்டங்களில் பெருந்தோட்ட பயிர்கள் பயிரிடப்பட்ட பிரதேசங்களுடன் மட்டும் மட்டுப்படுத்தி வைக்க வேண்டும். தோட்ட குடியிருப்பாளர்கள் பயன்படுத்துகின்ற குடியிருப்புகள், மரக்கறி பயிர் செய்யப்படுகின்ற காணிகள், கால்நடை வளர்ப்பிற்கான புத்தரைகள், தோட்டக் குடியிருப்பு பிரதேசங்கள் இருக்கின்ற பொதுப் பயன்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தோட்ட கம்பனிகளுக்கு இருக்கின்ற ஆதிக்கத்தை ரத்து செய்து விடுவித்துக் கொள்ள வேண்டும். இதுவே மலையக மக்களின் காணி உரிமைக்கான ஆரம்ப புள்ளியாகவும், அதிகாரத் தரப்பு ஏற்றுக்கொள்ளும் தீர்வாகவும் அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »