உலகளவில் புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர்வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மாத்திரலமல்லாது புற்றுநோயிலிருந்து மீளும் குழந்தைகளுக்கு முழுமையான மற்றும் கௌரவமான வாழ்க்கையை வழங்குவது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெறும் உலக சுகாதார ஸ்தாபணத்தின் 79 ஆவது உலக சுகாதார மாநாட்டின் சிறுவர் புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான விசேட அமர்வில், தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பிராந்திய சுகாதார அமைப்பின் தலைவராகவும் இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் பங்கேற்றுள்ள அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திங்கட்கிழமை (18) விசேட உரையாற்றினார்.
இவ்விசேட அமர்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல், சிகிச்சை முறைகள் மற்றும் பராமரிப்புச் சேவைகளின் முன்னேற்றம் காரணமாக, உலகளவில் புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர்வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு சிறந்த வெற்றியாகும். எனினும், சிறுவர் புற்றுநோய் விவகாரத்தில் உண்மையான வெற்றி என்பது, எத்தனை குழந்தைகள் உயிர்வாழ்கிறார்கள் என்பதில் மாத்திரமல்ல அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதிலுமே தங்கியுள்ளது. எனவே, புற்றுநோயை வென்ற ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமான, கௌரவமான, பயனுள்ள மற்றும் முழுமையான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும்.
இலங்கையின் தேசிய சுகாதாரக் கட்டமைப்பு 'அனைவருக்கும் இலவச சுகாதார சேவை' என்ற கொள்கையின் கீழ் கட்டியெழுப்பப்பட்டுள்ளதால், புற்றுநோயைக் கண்டறிதல், சிகிச்சை, தொடர் பராமரிப்பு மற்றும் உளவியல் சமூக ஆதரவு போன்றவற்றைச் சமத்துவமாக வழங்குவதற்கான வலுவான அடித்தளத்தை அது கொண்டுள்ளது. புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கான பராமரிப்பு என்பது வைத்தியசாலைகளுடன் மாத்திரம் சுருங்கிவிடாமல், ஆரம்ப சுகாதார சேவைகள், பாடசாலைகள், குடும்பங்கள் மற்றும் சமூகத்துடன் இணைக்கப்பட்ட தொடர்ச்சியான ஒரு பராமரிப்பு அமைப்பாக மாற வேண்டும்.
புற்றுநோயிலிருந்து மீளும் குழந்தைகளுக்கு இதயக் கோளாறுகள், ஹோர்மோன் பிரச்சினைகள், கற்றல் குறைபாடுகள், மனநல மற்றும் பிரஜனன சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற நீண்டகாலப் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இச்சவால்களை எதிர்கொள்ள வாழ்நாள் முழுமைக்குமான, நோயாளி மையப்படுத்திய பன்முக அணுகுமுறைகள் அவசியமாகும். அதற்கமைய, வைத்தியசாலைகள் மற்றும் சிறுவர் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் மூலம் முறையான தொடர் கண்காணிப்புச் சேவைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதுடன், சிறுவர் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை தடையற்ற பராமரிப்பை உறுதி செய்வதே எமது இலக்காகும்.
இதற்காக, சுகாதார மருத்துவ அதிகாரி, தாதியர், சமூக மட்டத்திலான தாய் சேய் நல்வாழ்வு திட்டங்கள் மற்றும் புதிய 'ஆரோக்கிய நல்வாழ்வு மையங்கள்' மூலம் சமூக மட்டத்தில் இந்த விடுபட்ட இடைவெளிகளைக் குறைத்து வருகின்றோம். சமூக அளவிலான தொடர் கண்காணிப்பு, ஊட்டச்சத்து ஆலோசனைகள் மற்றும் அவர்கள் மீண்டும் பாடசாலைகளுடனும் சமூகத்துடனும் இணைவதை உறுதிப்படுத்துவது குறித்து நாம் மேலும் ஆராய்ந்து வருகின்றோம். இந்த முயற்சியில் டிஜிட்டல் சுகாதார தகவல் அமைப்புகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
