Our Feeds


Monday, May 11, 2026

Zameera

அமெரிக்காவிற்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கான தடைகள் நீக்கம்

அமெரிக்காவிற்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீங்கியுள்ளதாகவும், இலங்கையிலிருந்து கடல் நண்டுகளை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க அரசு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்துள்ளதாகவும் கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவ்வமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவிற்கு மீன் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, "கடல் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின்" கீழ் விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் தேசிய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு, இலங்கையின் கடல் நண்டு பிடிப்புச் செயல்முறை மற்றும் அது தொடர்பான விதிமுறைகள் அமெரிக்கத் தரத்திற்கு இணங்குவதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

2025 நவம்பரில் அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பொன்றினால் இந்த ஏற்றுமதி நடவடிக்கைகளில் சில பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், கடற்றொழில் திணைக்களம், NARA நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிவியல் தரவுகள் மற்றும் விடயங்களைக் கருத்திற்கொண்டு, NOAA அமைப்பு தனது முடிவை மறுபரிசீலனை செய்து இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த அனுமதியின் கீழ் பின்வரும் விசேட அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன:

அமெரிக்காவிற்கு மீன் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தேவையான "ஒப்பீட்டுத் தகுதிச் சான்றிதழ்" இதன் மூலம் இலங்கைக்கு கிடைக்கிறது.

இந்த உத்தியோகபூர்வ அனுமதி 2029 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என்பதுடன், அக்காலப்பகுதிக்குள் இலங்கையிலிருந்து கடல் நண்டுகளை எவ்வித தடையுமின்றி ஏற்றுமதி செய்ய முடியும்.

மீன்பிடிக்கும் போது டொல்பின்கள், திமிங்கலங்கள் போன்ற கடல் பாலூட்டிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கை பின்பற்றும் வழிமுறைகள் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுள்ளன.

இந்த வெற்றியானது நாட்டின் கடற்றொழில் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்கவும் பெரும் பக்கபலமாக அமையும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »