Our Feeds


Sunday, May 31, 2026

SHAHNI RAMEES

அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இறுதியில் பொதுமக்கள் சுமக்கும் சுமையாக மாறுகிறது. - நாமல் கடும் விசனம்

 

நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதை விடுத்து, தமக்கு அரசியல் ரீதியாக நெருக்கமான ஒரு சில வணிகக் குழுக்களுக்குச் சாதகமாகவே தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து முடிவுகளை எடுத்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த தவறான முடிவுகளின் சுமை, வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு, மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றின் மூலமும், உள்நாட்டுத் தொழில்துறைகள் மற்றும் வாழ்வாதாரங்களின் வீழ்ச்சி மூலமும் சாதாரண மக்கள் மீது அநியாயமாகச் சுமத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு, தனது நலன்களுடன் இணைந்த ஒரு சில வணிகர்களைப் பாதுகாப்பதையே அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது.


அரசாங்கம் மக்களுடன் நிற்கவில்லை. அது ஆட்சியில் இருப்பவர்களுக்கு நெருக்கமான ஒரு சில வணிகர்களுடனேயே நிற்கிறது. அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் இறுதியில் பொதுமக்கள் சுமக்கும் சுமையாக மாறுகிறது.

தொழிற்சாலைகள் மூடப்பட்டு வரும் வேளையில், ஊழியர்களைப் பாதுகாப்பது குறித்தோ, வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பது குறித்தோ அரசாங்கம் மௌனம் காக்கின்றது. தொழில்துறை மற்றும் முதலீட்டிற்கு நிலையான சூழலை உருவாக்குவதற்குப் பதிலாக, நிர்வாகம் தொடர்ந்து பொதுமக்கள் மீதான நிதிச் சுமையை அதிகரித்து வருகிறது.

வலுசக்தி கொள்முதல் மற்றும் பொது விலைமுறிக் கோடல்களை கையாண்ட விதம் சமூகத்தில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தரம் குறைந்த இறக்குமதிகள் மற்றும் முறையற்ற நிர்வாகத்தால் ஏற்படும் நஷ்டங்கள், இறுதியில் அதிக செலவுகள் மற்றும் வரிகள் மூலம் மக்கள் மீதே சுமத்தப்படுகிறது.

கட்டமைப்பிற்குள் இருக்கும் தோல்விகளுக்கும் ஊழல்களுக்கும் மக்கள் பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். விவசாய சமூகத்துக்கு நிவாரணமும் பாதுகாப்பும் வழங்குவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த போதிலும், உள்ளுர் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் தவறிவிட்டது. உர விலையின் கடுமையான உயர்வையும், உற்பத்திச் செலவிற்கும் விவசாயிகளுக்குக் கிடைக்கும் சந்தை வருவாய்க்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகிறது.


முதலீடுகளை ஈர்ப்பது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, உள்ளுர் உற்பத்திகளை ஆதரிப்பது மற்றும் இளைய தலைமுறையினருக்குத் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறைகளை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு நடைமுறைப் பொருளாதார மீட்புத் திட்டம் இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது.Beaches & Islands

அரசியல் எதிராளிகளைக் கைது செய்வதோ அல்லது விமர்சனங்களை முடக்க முயல்வதோ மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாகாது. நாட்டிற்குத் தேவையானது தீர்வுகள், முதலீடுகள், வேலைகள் மற்றும் சாதாரண மக்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளும் ஒரு தலைமைத்துவம் ஆகும்.

அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான பிரச்சாரங்களை விடுத்து, மக்கள் நலக் கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறும், மக்கள் மீதான சுமையைக் குறைத்து, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி செய்யுமாறும் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »