Our Feeds


Friday, May 22, 2026

Zameera

வெலிமடையில் தோட்டத் தொழிலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் - வடிவேல் சுரேஷ் கண்டனம்


 வெலிமடையில் மீண்டும் ஒரு தோட்டத் தொழிலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்திலும் ஏனைய மாநாடுகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டு வரும் அதே வேளையில், இவ்வாறான கசப்பான சம்பவங்கள் தொடர்வது வேதனைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்களின் பாதுகாப்பு குறித்து பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்று கொண்டிருந்த அதே தினத்தில், வெலிமடை டயரபா தோட்டத்தில் தங்கேஸ்வரன் என்ற தொழிலாளி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

தங்கேஸ்வரன் என்பவர் சப்பாத்துக் கால்களாலும், மண்வெட்டிக் கம்பினாலும் தாக்கப்பட்டு, கால் முறிந்த நிலையில் தற்போது வெளிமடை இலக்கம் 5 வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே நீலகாமத்தில் , உடசலாவை, ராகலை என பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். “அடித்தால் திரும்ப அடி” என்ற சட்டத்தைக் கொண்டுவந்தால் நாங்களே எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம் எனக் குறிப்பிட்ட அவர், தொழிலாளர் சட்டத்தில் இதற்கான உரிய பாதுகாப்பு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

​மலையக மக்களின் அரசியல் மற்றும் உரிமைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் அதே நேரத்தில் இத்தகைய வன்முறைகள் அரங்கேறுவது ஒட்டுமொத்த மலையக சமூகத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »