Our Feeds


Friday, May 8, 2026

Zameera

வங்கி துறையில் நம்பிக்கை இழப்பு: இது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது – பைசர் முஸ்தபா


 வங்கித் துறையிலும் பணப் பரிமாற்றங்களிலும் காணப்படும் பாரிய பலவீனங்கள் காரணமாக மக்களிடையே நம்பிக்கை இல்லாமல்போயுள்ளது. இந்த நிலைமை பயங்கரவாதத்தை விடவும் பாரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என எதிர்க்கட்சி உறுப்பினர்  பைசர் முஸ்தபா தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் வர்த்தமானி மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு இணையாகப் பொருளாதாரப் பாதுகாப்பும் முக்கியமானது. என்றாலும்  தற்போது அது பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அண்மைக் காலத்தில் திறைசேரியிலிருந்து  2.5 மில்லியன் டொலர் காணாமல் போனமை மற்றும் வங்கி அமைப்பில் நிலவும் பாதுகாப்பற்ற தன்மை பாரிய விடயமாகும்.


ஏனெனில் வங்கி அமைப்பும் திறைசேரியும் பாதுகாப்பாக இல்லாவிட்டால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டிற்கு ஈர்க்க முடியாது. வங்கிகளைக் கண்காணிப்பதற்காக மத்திய வங்கி மாதத்திற்கு 50 முதல் 100 மில்லியன் ரூபாய் வரை அறவீடு செய்த போதிலும், வங்கித் துறையிலும் பணப் பரிமாற்றங்களிலும் காணப்படும் பாரிய பலவீனங்கள் காரணமாக மக்களிடையே நம்பிக்கை இல்லாமல்போயுள்ளது. இந்த நிலைமை பயங்கரவாதத்தை விடவும் பாரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது குறித்து ஆராய உடனடியாக விசேட செயலணி ஒன்றை அமைக்க வேண்டும்.

மேலும் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அடக்குமுறைக்காகப் பயன்படுத்தப் போவதில்லை என்று கூறினாலும், அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் ஊடாகச் சாதாரண சட்டங்கள் இடைநிறுத்தப்படுவதால் மக்களிடையே தொடர்ச்சியான பயம் நிலவுகிறது. இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க அவசரகாலச் சட்டம் தேவையில்லை. நாட்டின் சாதாரண சட்ட அமைப்பும் அரச இயந்திரமும் சரியாகச் செயற்பட்டால் இவ்வாறான விசேட சட்டங்கள் தேவைப்படாது.


மேலும் உயர்பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களது பொறுப்புகளைத் தவறி இருக்கிறார்கள்.  ஜப்பானில் ஒரு ரயில் ஒரு நிமிடம் தாமதமானாலும் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்கிறார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிப்பட்ட ரீதியில் ஊழல்வாதிகளாக இல்லாவிட்டாலும், தமது பொறுப்பிலுள்ள நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அவர்கள் கடமைப்பட்டுள்ளனர். 


அதேநேரம் கடந்தகால அரசாங்கங்கள் செய்த தவறுகள் அல்லது 75 ஆண்டுகால சாபம் பற்றித் தொடர்ச்சியாகப் பேசி எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அந்தத் தவறுகளைத் திருத்தி உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதால், கடந்த காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் பொறுப்பைச் சரியாக ஏற்று நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »