இலங்கைக்கு எந்தவித நிபந்தனைகளும் இன்றி ஆதரவளிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் கலாநிதி நய்யார் நசீர் தெரிவித்துள்ளார்.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காநதவுக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (25) கமத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், கால்நடை உற்பத்தியில் உலகளவில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளதால், அது சார்ந்த அறிவையும், விவசாய உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப அறிவையும் இலங்கைக்கு வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஜூன் மாத இறுதியில் இலங்கை பிரதமரின் பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெறவுள்ளதுடன், அதற்காகத் தனது நாடு மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
"முதலாவதாக இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தானைப் போன்றே இலங்கையும் ஒரு விவசாய நாடாகும் என்பதால், இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் உதவிகளைப் பரிமாறிக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. உலக அளவில் கால்நடை உற்பத்தியில், குறிப்பாகப் பால் உற்பத்தியில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளது. எனவே, இரு நாடுகளுக்கும் இடையே அந்தத் துறையில் ஒரு வலுவான தொடர்பை ஏற்படுத்த முடியும். நாம் இலங்கைக்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
பாகிஸ்தானில் சீனி உற்பத்தி, காய்கறி உற்பத்தி மற்றும் பழ உற்பத்தி போன்ற அனைத்துத் துறைகளும் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன. எமது நாட்டில் சிறந்த பாஸ்மதி அரிசி வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இலங்கைக்குப் பொருத்தமான பாஸ்மதி அரிசி வகைகளை உருவாக்கிக்கொள்ள எம்மால் உதவ முடியும். அத்துடன், பாகிஸ்தானில் உயர்தரமான, மிகவும் சுவையான மாம்பழ வகைகள் உள்ளன.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டில் கமத்தொழில் அமைச்சின் பெயரை 'உணவுப் பாதுகாப்பு அமைச்சு' என மாற்றியமைத்தோம். நீர் இருந்தபோதிலும் அதனை விநியோகிப்பதில் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்த நிலைமை குடிநீர் விநியோகத்தைப் போன்றே நீர்ப்பாசனத் துறையையும் பாதிக்கின்றது. எவ்வாறாயினும், பாகிஸ்தான் விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் இலங்கை பிரதமர் பாகிஸ்தானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அதற்காக நாம் மிகுந்த ஆர்வத்துடன் தயாராகி வருகிறோம். இந்த விஜயத்தில் பிரதமருடன் இணைந்து கொள்ளுமாறு அல்லது பிறிதொரு சந்தர்ப்பத்தில் பாகிஸ்தானுக்கு வருகை தந்து, அங்கு விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நேரில் பார்வையிடுமாறு கமத்தொழில் அமைச்சருக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்."
Tuesday, May 26, 2026
இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க பாகிஸ்தான் தயார்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
