Our Feeds


Tuesday, May 26, 2026

Admin

முக்கிய தீர்மான சக்தியாக மாறிவரும் ரில்வின்!


“மக்களின் பிரதிநிதி கூட இல்லாத கட்சியொன்றின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நாட்டின் முக்கிய தீர்மானங்களை முடிவுசெய்யுமளவுக்கு அதிகாரமுடையவராக மாறியுள்ளார்.


ஜனநாயகத்துக்கு என்ன நடந்துள்ளது? இரண்டு வருடங்களாகியும் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளின் காரணமாகவே தேர்தல் முறையை மாற்ற முடியவில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள் என்றால் அரசாங்கத்தின் இயலாமையின் காரணமாகவே மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளதென்று” ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

எதிர்க் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அமைச்சரவையோ, ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இந்த அரசாங்கத்தின் தீர்மானங்களை எடுப்பதில்லை.பெலவத்தையிலேயே அரசாங்கத்தின் தீர்மானங்கள் இறுதி செய்யப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவே பெலவத்தையின் முக்கிய தலைவர்.

ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்துக்குச் சென்று, இந்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை. அடுத்த வருடத்தில் தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பில் பரிசீலித்து கொண்டிருக்கிறோம். மக்களின் பிரதிநிதி கூட இல்லாத கட்சியொன்றின் பொதுச் செயலாளர் ஒருவர் நாட்டின் முக்கிய தீர்மானங்களை முடிவுசெய்யுமளவுக்கு அதிகாரமுடையவாராக மாறியுள்ளார். ஜனநாயகத்துக்கு என்ன நடந்துள்ளது.

ரில்வின் சில்வாவே ஜனாதிபதிக்கும், அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்துக்கும் மேல் உயரிய இடத்தில் இருக்கிறார். தேர்தல் ஆணைக்குழுவை மூடிவிட வேண்டும். தேர்தல் ஆணைக்குழு, பாராளுமன்ற தீர்மானங்களுக்கமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படுவதில்லை. ரில்வின் சில்வாவின் தீர்மானங்களுக்கமைய முடிவெடுக்கப்படுகிறது.

திறைசேரி நிரம்பி வழியுமளவுக்கு நிதி இருப்பதாகவும் அதனால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றே இந்த அரசாங்கத்தினர் கூறினார்கள். அவ்வாறு இருக்கையில், ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை முறையாக நடத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் முறையாக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்று இவர்கள் கூறினார்கள். அதனாலேயே தேர்தலும் நடத்தப்படாமல் இருக்கிறது என்றார்கள். இவர்கள் ஆட்சிபீடமேறி இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. இவற்றுக்கு தீர்வுக் காண்பதற்காகவே இந்த அரசாங்கத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களாகியும் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளின் காரணமாகவே தேர்தல் முறையை மாற்ற முடியவில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள் என்றால் அரசாங்கத்தின் இயலாமையின் காரணமாகவே மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் இவர்களுக்கு அங்கிகாரம் இல்லாமல் போய்விடும் என்பதற்காகவே வேண்மென்றே தேர்தலை நடத்தாமல் காலங்கடத்தி வருகிறார்கள்.

மாகாண சபைத் தேர்தலை கட்டாயம் நடத்த வேண்டும். பொதுமக்கள் இந்தத் தேர்தலுக்காக முன்னிருக்க வேண்டும். சர்வதேச தரப்பும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »