இஸ்ரேலில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணம் வைப்பிலிட்டுள்ள
குளோபல் ரெமிட்' நிறுவனத்தின் செயற்பாடுளை இஸ்ரேல் அரசாங்கமே இடை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குச் சொந்தமான 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. எனவே மிக குறுகிய காலத்திற்குள் இதற்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருன் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணப்பரிமாற்றத்திற்காக பரவலாகப் பயன்படுத்தும் நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றான ‘குளோபல் ரெமிட்’ நிறுவனத்தின் உள்நாட்டு நிதி இணக்கத்தன்மை சிக்கல்கள் காரணமாக, இஸ்ரேலின் மூலதனச் சந்தை, காப்புறுதி மற்றும் சேமிப்பு அதிகாரசபையினால், கடந்த மே 13 முதல் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தச் செயல்பாட்டு இடைநிறுத்தத்தின் விளைவாக, இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டுத் தொழிலாளர்களின் டிஜிட்டல் பணப்பைகளில் வைப்பிலுள்ள பணம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்ட மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் முடிவடையும் வரை அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனம் கலைப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படும் வரை அந்தப் பணத்தை மீளப் பெற முடியாது. இருப்பினும், கலைப்புச் செயல்முறையின் போது வாடிக்கையாளர்களின் பணத்தை விடுவிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த விவகாரம் தொடர்பான முதல் நீதிமன்ற வழக்கு விசாரணை கடந்த ஜூன் 10 ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது, 'குளோபல் ரெமிட்' நிறுவனத்தின் செயல்பாடுகளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கும் பிற நிதி நிறுவனங்களிடமிருந்து ஏலம் கோரும் செயல்முறையை நீதிமன்றம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.
இந்த சிக்கலான நிலை ஏற்பட்டவுடன், அமைச்சு முறையான மற்றும் முறைசாரா வழிகளில் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்புகொண்டு பணியாற்றி வருகிறது. இதன் விளைவாக, இலங்கை முன்வைத்த விடயங்கள் குறித்து அவர்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர். இந்தச் சிக்கல் இலங்கையர்களுக்கு மட்டுமல்லாமல், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டு வங்கிகள் ஊடாக இந்த நிறுவனத்தின் பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்துள்ளன, அதுவரை எந்தவித சிக்கலும் இன்றி வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களை நாட்டிற்கு அனுப்ப முடிந்தது. ஆனால், இந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட ஒரு சிக்கல் காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருன் ஹேமசந்திர குறிப்பிடுகையில், இது ஒரு பொதுவான பிரச்சினையாகும். 'குளோபல் ரெமிட்' நிறுவனம் இது குறித்து இஸ்ரேலிய நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குச் சொந்தமான 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்திற்குள் இதற்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அத்துடன், சம்பந்தப்பட்ட பணத்தைச் செலுத்தும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக 'குளோபல் ரெமிட்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இராஜதந்திர மட்டத்திலும் நிறுவன மட்டத்திலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, சரியான மற்றும் உண்மையான தகவல்களை மட்டுமே மக்களுக்குக் கொண்டு சேர்க்குமாறு அனைத்து ஊடகங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
