Our Feeds


Friday, June 5, 2026

SHAHNI RAMEES

பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது தமிழர்களை மீண்டும் பலிகடாவாக்கும் அரசியல்!

 



பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாடகர் கணேஷ்குமார்

சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழர்களை மீண்டும் பலிகடாவாக்கும் அரசியலின் ஒரு பகுதியாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.


அவர் இன்று (05) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


பௌத்த துறவிகளின் துறவறத்திற்கு எதிரான செயற்பாடுகளாலும், விகாரைகள் மற்றும் மடாலயங்களின் கட்டமைப்பு அதன் நிர்வாகம் தொடர்பான விடயத்திலும் பௌத்த சிங்களவர்கள் கோபமடைந்து வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை தோன்றியுள்ளது. இன்னொரு பக்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் போக்கு காரணமாகவும் மக்கள் மீது சுமத்தப்பட்டு கொண்டிருக்கும் தாங்க முடியாத பொருளாதார சுமையாலும் மக்கள் கோபம் கொண்டுள்ள நிலையில் இதனை திசை திருப்பி தமிழர்களை மீண்டும் பலி கடாவாக்கும் அரசியலின் ஓர் அங்கமாகவே புலி உருவாக்கம் மீண்டும் பேசுப் பொருளாகி உள்ள சூழ்நிலையில் பாடகர் கணேஷ்குமார் சங்கீதன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.


தேசிய மக்கள் சக்தியினர் வடக்கிலே தமது தேர்தல் வேட்டையின் போது விடுதலைப்புலிகளின் இயக்க பாடல்களை தமது தேர்தல் மேடைகளில் முழங்கி அரசியல் செய்த போதும் தமிழர்கள் அவர்களை குற்றவாளி கூண்டிலே நிறுத்தவில்லை. ஆனால் சங்கீதன் எழுச்சி பாடல்கள் பாடியதை புலி உருவாக்கம் எனக் கூறி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்பில் வைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.



தமிழர்கள் மத்தியிலும் சிங்களவர் மத்தியிலும் தமிழர்களின் அரசியல் மீது ஆர்வம் கொண்ட மற்றும் எழுத்தாளர்கள் மத்தியிலும் நன்கு பரீட்சியமான எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்ட போது அதனை விடுவிப்பதற்கான சாத்தியப்பாடுகள் இருந்தும் அதனை விடுவிக்காது இருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.


இது கவிஞர்கள், பாடகர்கள், எழுத்தாளர் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பாவிக்க எடுக்கும் சிங்கள பௌத்த அரசியல் வன்முறையாகும். பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழிப்போம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் அவ் அடக்குமுறை சட்டத்தை வடக்கின் கலைஞர்கள் மீது பிரயோகிக்க ஆரம்பித்திருப்பது பேச்சு சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் என்பவற்றை பறிப்பதற்காகவே. இது தமிழர் தாயகத்தில் மட்டுமல்ல தெற்கிற்கும் இச்சட்டம் பாயும் அபாயம் உள்ளது என்பதை தெற்கின் மக்கள் உணர வேண்டும்.


ஏற்கனவே குறிப்பிட்டது போல தெற்கில் தோன்றியுள்ள அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு முறை கேடான பௌத்த பிக்குகளை கையாள்வதில் பௌத்த மகா சங்கங்களின் அசமந்த போக்கு மற்றும் அமைதி நிலை காரணமாக எழுந்துள்ள எதிர்ப்பு என்பவற்றை மூடி மறைக்க இதனையும் விட மேலான ஒரு பிரச்சினை நாட்டில் உள்ளது என்பதை காட்டுவதற்காகவே புலி உருவாக்கம் எனும் போலி நாடகம் ஆடப்படுகின்றது என்பதே உண்மையாகும்.


வடக்கு கிழக்கு தமிழர் தாயக மக்களும், புலம்பெயர் தமிழர்களும் கடந்த 17 வருட காலமாக தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு நிகழ்ந்ததோடு இறுதியில் 2009ல் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையும் நிகழ்ந்தது என்பதை சுட்டிக்காட்டி வருகின்ற போது அதனையே தெற்கின் சிங்கள மொழி பேசும் அருட்தந்தை ஒருவர் தெற்கில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போது வலியுறுத்தி கூறியதை இனவாத கண் கொண்டு பார்த்து அதனை பேசு பொருளாக்கி தெற்கின் இனவாத அரசியல் வாதிகளும் அவர்களின் கூட்டணியும் இனவாதத்தை கக்கிக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம்.



அதன் அடுத்த கட்டமாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் மாணவர்களும் இணைந்து அமைத்த வெசாக் வெளிச்ச கூட்டினை விசமிகள் நாசப்படுத்திய போதும் அதனை செய்தது யார்? என்பதை தெரியாத நிலையிலும் தமிழர்களுக்கு எதிரான இனவாத விசமப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.


இன்னும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கொழும்பில் நடந்த மாநாடு ஒன்றில் இலங்கை புவிசார் அரசியல் வெளிநாட்டு கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள் துறை நிபுணர் அசங்க குணசேகர அவர்கள் புலிகளின் மீளுருவாக்கம் விடயமாக கருத்து தெரிவித்துள்ளதோடு அதற்கு எதிராக போராட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.Beaches & Islands


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற  முப்பது ஆண்டுகால யுத்தத்தில் கொல்லப்பட்ட படையினரின் நினைவேந்தல் நிகழ்வில் "படையினரின் கனவை நனவாக்க வேண்டும்" எனக் கூறியமை தமிழர்கள் மீதான போர் தொடரும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. போருக்கான கருத்துருவாக்க பின்புலத்திலேயே இனவாதம் தூண்டப்படுகின்றது. பயங்கரவத தடைச் சட்டம் தமிழர்களுக்கு எதிராக தமது கோரப்பற்களை நீட்டிக் கொண்டிருக்கின்றது என்பதன் அடையாளமாகவே பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர் நினைவேந்தல் என எழுச்சி கொள்ளும் தமிழர் தாயக மக்களே பாடகர் சங்கீதனுக்காகவும் எமது குரலை உயர்த்துவோம். கடந்த 17 வருட காலமாக எமக்குள் பிளவுகளை ஏற்படுத்திய சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை அகற்றிடவும் 2009 ஆம் ஆண்டு அழிவு நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படும் தமிழர்களின் அரசியலை பலப்படுத்தி முன்னோக்கி நகர்த்தவும் ஒன்றான சக்தியாக எழுச்சி கொள்வோம். எமது அரசியல் எழுச்சியே எமது விடுதலை என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »