(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டமை தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் தலைவர் என்று தன்னை நினைத்துக் கொள்பவர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இவர் ஏன் இதனை குறிப்பிடவில்லை. சுரேஸ் சலேவின் விவகாரத்தை திசை திருப்பவே இவ்வாறான கருத்துக்களை தற்போது குறிப்பிடுகிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற நடைபெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள், குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உரையாற்றும் போது, சந்தேகத்தின் அடிப்படையில் கைதாகியுள்ள சுரேஷ் சலே தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒரு குழு அவருக்கு சார்பாக கதைத்ததுடன், இன்னுமொரு குழு எதிராகவும் மேலும் ஒரு குழு அமைதியாகவும் இருந்ததுது. இதன்போது இன்னுமொரு விடயமும் இடையில் புகுந்து சென்றது.
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் தலைவர் என்று தன்னைத் தானே கூறிக்கொண்டிருப்பவர் பிரபாகரனின் மகன் தொடர்பில் கருத்தொன்றை குறிப்பிட்டுள்ளார். அது அவருக்கு சம்பந்தப்படாத விடயமே. ஆனால் அவர் தனக்குள்ள சிறப்புரிமையின் அடிப்படையில் கதைத்தார்.
பிரபாகரனின் மகனை ஏன் காப்பாற்றவில்லை என்று அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்படியென்றால் அந்த காலத்தில் அரசாங்கம் யாருடையது. எமது 159 பேரும் அப்போது இருந்தார்களா? இப்போது அது தொடர்பில் கதைப்பவர்கள் அப்போது எங்கே இருந்தார்கள். எங்கே பார்த்துக்கொண்டிருந்தனர். இவர்கள் சுரேஸ் சலேவின் பிரச்சினையை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
அசாத் மௌலானா சனல் 4 ஊடகத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அது தவறானது என்ற கருத்தை கொண்டு செல்வதற்காகவே இந்த விடயத்தை உள்ளே புகுத்துவதற்காகவே முயற்சிக்கின்றனர். மறைமுகமாக இதனை செய்ய முற்பட்டுள்ளார். குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை குழப்புவதற்கே முயற்சிக்கின்றனர். ஆனால் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் இந்த அரசாங்கம் விசாரணைகளை நிறுத்தாது என்றார்.
