Our Feeds


Sunday, June 14, 2026

Zameera

கோப்பாய் பொலிஸ் நிலைய புதிய கட்டிடம் திறப்பு


பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 




குற்றச் செயல்களைப் பொலிஸ் திணைக்களத்தால் மாத்திரம் தனித்துக் கட்டுப்படுத்திவிட முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.




1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளாகத் தற்காலிக இடங்களில் இயங்கிவந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கான புதிய நிரந்தரக் கட்டடம் இன்று (14)உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவுடன் இணைந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.




நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர்,




நான் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் பொலிஸார் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து அதிகளவான முறைப்பாடுகளைப் பெற்றிருக்கின்றேன். குறிப்பாக, பொலிஸ் நிலையங்களில் தமது முறைப்பாடுகள் ஏற்கப்படுவதில்லை எனவும், தமக்குத் தீங்கிழைத்த குற்றவாளிகளுடன் பொலிஸார் நட்பாகப் பழகுவதாகவும் மக்கள் முறையிட்டிருந்தனர். 




ஆனால், இன்று அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வழங்கிவரும் உறுதியான தலைமைத்துவமே இந்த மாற்றத்துக்குக் காரணமாகும். இருப்பினும், இத்துறையில் இன்னமும் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டியுள்ளது.




வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகளை நான் பாராட்டுகின்றேன். அவர்கள் தங்களால் முடியுமானளவு சிறப்பான சேவைகளைத் தற்போது வழங்கி வருகின்றார்கள். எமது வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்திருந்த வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைக் கலாசாரம் இன்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.




பொலிஸார் தமது சேவைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்குப் பௌதீக வளங்கள் மிகவும் அவசியமானவை. அந்தவகையில், நீண்டகாலத்தின் பின் இன்று அவர்களுக்குத் தேவையான நிரந்தரக் கட்டடம் கிடைத்துள்ளது. இதன்மூலம் அவர்கள் மேலும் சிறப்பான சேவைகளை வழங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம்.




கிளிநொச்சியில் இடம்பெற்றுவந்த சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தல்களால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக நானும், அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ சந்திரசேகர் அவர்களும் பிரதிப் பொலிஸ்மா அதிபரைச் சந்தித்திருந்தோம். 




அதன்போது, 'கடந்த காலங்களில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அரசியல்வாதிகள் எம்மைத் தேடி வருவார்கள் ஆனால், நீங்களோ அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வந்துள்ளீர்கள்' என அவர் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார். அதுதான் உண்மை. சட்டவிரோதச் செயற்பாடுகளின் பின்னால் இன்றைய அரசாங்கம் ஒருபோதும் நிற்காது. இத்தகைய குற்றங்களை ஒழிப்பதற்குப் பொதுமக்களாகிய நீங்களும் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும், எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.




இந்நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. அதன்பின்னர், புதிய பொலிஸ் நிலையக் கட்டடம் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டு அதிதிகளால் பார்வையிடப்பட்டது. தொடர்ந்து மேடை நிகழ்வுகளும், பொலிஸ் நிலைய வளாகத்தில் மரம் நடுகை நிகழ்வும் நடைபெற்றன.




இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறிபவானந்தராஜா, ஜெ.றஜீவன், பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »