Our Feeds


Sunday, June 7, 2026

SHAHNI RAMEES

பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிப் பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்!

 


எதிர்வருங்காலங்களில் நிலையான அபிவிருத்தி,

வர்த்தகம், முதலீடு, காலநிலை நடவடிக்கை, டிஜிட்டல் மாற்றம், கடல்சார் ஒத்துழைப்பு போன்ற துறைகளில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிப் பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.


இலங்கையிலுள்ள பிரான்ஸ் அபிவிருத்தி முகவரகத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் அபிவிருத்தி முகவரகத்தின் பணிப்பாளர் யாசித் பென்சையித் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர கூறியிருப்பதாவது:


எமது அண்மைய வரலாற்றில் மிகவும் கடினமான தருணங்களில் ஒன்றான சுனாமி பேரழிவிலிருந்து நாடு மீண்டெழுந்துகொண்டிருந்த வேளையிலேயே பிரான்ஸ் அபிவிருத்தி முகவரகத்தின் பங்களிப்பு ஆரம்பமானது. கடந்த இரு தசாப்தங்களாக இந்தப் பங்களிப்பானது இலங்கை - பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான வலுவான நல்லுறவாக வளர்ச்சியடைந்துள்ளது.


இலங்கைக்கு பிரான்ஸ் அபிவிருத்தி முகவரகம் வழங்கிய பங்களிப்பானது நீர், தூய்மையாக்கல், நகர அபிவிருத்தி, பசுமை ஆற்றல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறான அபிவிருத்திகள் போன்றவற்றுக்கு பெரிதும் உதவியது. இவை வெறும் உட்கட்டமைப்புத் திட்டங்கள் மாத்திரமல்ல. மாறாக இவை மக்களின் வாழ்க்கைளை நேரடியாக மேம்படுத்தக்கூடிய, சமூகங்களை வலுப்படுத்தக்கூடிய மற்றும் நிலையான தேசிய அபிவிருத்திக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய முதலீடுகளாகும்.


எதிர்வருங்காலங்களில் நிலையான அபிவிருத்தி, வர்த்தகம், முதலீடு, காலநிலை நடவடிக்கை, டிஜிட்டல் மாற்றம், கடல்சார் ஒத்துழைப்பு போன்ற துறைகளில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிப் பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »