நாட்டின் தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது குறித்து சிவில் அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கோரியுள்ளது.
மாகாண சபை தேர்தல்கள் தவிர்ந்த ஏனைய தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான இந்த யோசனைகளை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும் என பாராளுமன்ற செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் அமைந்துள்ள இந்த விசேட தெரிவுக்குழுவில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்தவர்களாக உள்ளனர்.
நாட்டின் தற்போதைய தேர்தல் கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதோடு, பத்தாவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் சட்டங்களை மறுசீரமைத்து முறைப்படுத்துவதே இந்த குழுவின் பிரதான நோக்கமாகும்.
இதற்கமைய பின்வரும் முக்கிய சட்டங்கள் மற்றும் அவற்றின் திருத்தங்களை மறுபரிசீலனை செய்ய இந்த குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களைப் பதிவு செய்யும் சட்டம்
உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் சட்டம்
பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம்
ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம்
மேலும், தகுந்த ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைக் கொண்ட ஆவணங்களை, செயலாளர், பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு, பாராளுமன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ பொதுமக்கள் அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
