Our Feeds


Thursday, June 25, 2026

Zameera

தெல்தெனியவில் காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் கழுத்து நெரித்துக் கொலை ; பிரேதப் பரிசோதனையில் உறுதி



தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட அம்பாறை பொது வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணர் மரணம், கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கொலை என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


கடந்த ஜூன் 17ஆம் திகதி காரில் இருந்து இவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின் போது, "தான் அறைக்குள் சென்ற போது குறித்த பெண் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் செய்துகொண்டிருந்தார் எனவும், பயத்தினாலேயே சடலத்தைக் காரில் ஏற்றி வந்து தெல்தெனியவில் கைவிட்டதாகவும்" வாக்குமூலம் அளித்திருந்தார்.


எனினும், தெல்தெனிய சட்ட வைத்திய அதிகாரி  கே.எஸ். பண்டாரவினால் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், இது தற்கொலை அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


துணி, கயிறு அல்லது அது போன்றதொரு பொருளைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்தே இப்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என வைத்திய அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.


இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், அடுத்தடுத்து இரு முக்கிய கைது நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.


புதன்கிழமை (24) அதிகாலை, யாழ்ப்பாணம் சாவகச்சேரி - கைதடி பகுதியில் பஸ்ஸில் தப்பியோட முயன்ற 43 வயதுடைய பிரதான சந்தேக நபரான காதலன், அவரது 35 வயதுடைய மனைவி மற்றும் ஒரு குழந்தையை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்தனர்.


இவர்கள் கொஸ்கொல்லா, ஹொரம்பாவ பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.


பிரதான சந்தேக நபர் தலைமறைவாக இருந்த காலத்தில் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ், இராஜவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரை நுவரெலியா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்றைய தினம்  கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக நேற்றையதினம்  இரவு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


கொலை செய்யப்பட்ட  பெண் கடந்த  03  ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.


சந்தேகநபர் ஹோட்டல் அறைக்குள் நுழைந்து, பின்னர் பெண்ணின் சடலத்தைத் தூக்கிக்கொண்டு வெளியேறும் அதிர்ச்சியூட்டும் சிசிரிவி காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியாகியிருந்ததோடு, அவை தற்போதைய பொலிஸ் விசாரணைகளில் முக்கிய சான்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »