Our Feeds


Saturday, June 6, 2026

Zameera

மாகாணசபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான ஆதரவை நிரூபித்து காட்ட வேண்டும் - ரஞ்சித் மத்தும பண்டார


 (எம்.மனோசித்ரா)


டொலர் பெறுமதியின் கட்டுப்பாடற்ற உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டின் பிரதான ஏற்றுமதித் துறைகளான ஆடை மற்றும் இறப்பர் கைத்தொழிலுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்புகள் காரணமாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை தடுக்க அரசாங்கம் தவறியுள்ளது. இதனால் ஆளுங்கட்சி தேர்தலை நடத்த அஞ்சி கிராமங்களுக்குள் கூடச் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு தைரியமிருந்தால் உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான ஆதரவை அளவிட்டுக் காட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சவால் விடுத்தார்.


கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் சனிக்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு சவால் விடுத்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


டொலரின் பெறுமதியை கட்டுப்படுத்தியதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இன்று டொலரின் பெறுமதி 348 ரூபாவையும் தாண்டிச் சென்றுள்ளது. இதனால் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சீனி, பருப்பு, பால்மா உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் சுமார் நூறு சதவீதத்தால் அதிகரித்துள்ளன. அரசாங்கத்தால் டொலர் பெறுமதி உயர்வை தடுத்து நிறுத்த முடிய வில்லை.


அது மாத்திரமின்றி எமது நாட்டின் பிரதான ஏற்றுமதித் துறையான ஆடைத் தொழில்துறைக்கு அமெரிக்கா சில மாதங்களுக்கு முன்னர்      20 சதவீத வரியை விதித்திருந்தது, கடந்த வாரம் மேலும் 12.5 வீத வரியை விதித்துள்ளது. இதைப் பற்றி அரசாங்கத்தில் யார் பேசுகிறார்கள்? ஆடைத் துறை மட்டுமன்றி, இறப்பர் பாலில் இருந்து தயாரிக்கப்படும் இறப்பர் தயாரிப்புகளையும் அமெரிக்காவே அதிகம் கொள்வனவு செய்கிறது. இதனால் நாட்டின் இறப்பர் விலைக்கும் ஆடைத் தொழில்துறைக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.  



அரசாங்கம் இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. டொலர் பெறுமதியைக் குறைக்க வேண்டுமாயின் எமது ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். ஆனால் தற்போது எமது ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் அரசாங்கமோ தேசிய உற்பத்தி வருமானம் அதிகரித்துள்ளதாகக் கூறிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு வருமானம் அதிகரித்திருந்தால் மக்களுக்கு எரிபொருள் மானியத்தையாவது வழங்கியிருக்க வேண்டுமல்லவா?


அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் இப்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம். ஒரு நாட்டின் மக்களின் விருப்பு வெறுப்புகளை அறிவதற்காகவே ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க 43 வீத வாக்குகளையே பெற்றார். அதன் பின்னர் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சற்று அதிகமாக வாக்குகளைப் பெற்றனர். ஆனால் சில மாதங்களுக்குப் பின்னர் நடந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அது 40 சதவீதமாகக் குறைந்தது.


இன்று மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் இவர்கள் 20 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெறுவார்கள். தகுந்த காலத்தில் உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களைத் தங்களது முதலாம் ஆண்டு ஆட்சி காலத்துக்குள் நடத்துவதாகத் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று இவர்களால் தேர்தலை நடத்த முடியாது, ஒரு கிராமத்திற்குள் கூடச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »