Our Feeds


Saturday, June 6, 2026

Admin

சலே உயிரிழந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் அவருடன் புதைக்கப்பட்டுவிடும்!


அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மனிதாபிமானமற்ற கொடுமைகள் இழைக்கப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்களை பிவிதுரு ஹெல உறுமயவின் உதய கம்மன்பில ஊடக சந்திப்பொன்றில் வெளியிட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய தடயவியல் மற்றும் சட்ட மருத்துவ நிறுவகத்தின் பதிவாளர் வைத்தியர் ஜெயசீலன் ஜெயகாந்தனின் மருத்துவ அறிக்கையை ஆதாரமாகக்கொண்டு அவர் இதனைப் பகிரங்கப்படுத்தினார்.

சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் எட்டு சிசிடிவி கெமராக்கள் இருந்ததாகவும், அவர் மீதான தாக்குதல்கள் மற்றும் நிர்வாணப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யென்றால் அந்த காட்சிகளை வெளியிடுமாறு கம்மன்பில குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சவால் விடுத்துள்ளார்.

அந்த மருத்துவ அறிக்கையின்படி, சலே கைது செய்யப்பட்ட சுமார் 7 நாட்களுக்குப் பிறகு அவரது உள்ளாடைகளைத் தவிர மற்ற அனைத்து ஆடைகளையும் கழற்றுமாறு பணிக்கப்பட்டு, கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் குனிய வைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் ஏனைய மூன்று கைதிகளுக்கு முன்னால் ஒரு அதிகாரியால் அவர் உடல் ரீதியான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் சுமார் 40 நாட்களாக வெறும் தரையில் உறங்க வைக்கப்பட்டுள்ளார். தற்போது ஒரு அங்குல தடிமனுள்ள மெத்தை வழங்கப்பட்டிருந்தாலும், அவரது முகத்திற்கு நேரே 24 மணி நேரமும் பிரகாசமான மின்விளக்கு எரியவிடப்படுவதால் அவர் கடும் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்.

சலேயின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவருக்குப் போதுமான குடிநீர், காய்கறிகள், பழங்கள், இறைச்சி அல்லது மீன் வழங்கப்படாததால் அவர் கடுமையான புரதச்சத்து மற்றும் விட்டமின் (B12, D) குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

சலேயின் உடல்நிலையைச் சீராக்க மருத்துவர்கள் விரிவான உணவுப் பட்டியலைப் பரிந்துரைத்த போதிலும், அவருக்கு மிகக் குறைந்த அளவிலான உணவே (ஒரு கரண்டி சோறு மற்றும் முள்ளங்கி போன்றன) வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், வாரத்திற்கு நான்கு நாட்கள் 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற மருத்துவப் பரிந்துரையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தனது பொய்களை மறைக்க, சலேயைத் தற்கொலைக்குத் தூண்டும் நோக்கில் இவ்வாறான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கம்மன்பில சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சலே உயிரிழக்கும் பட்சத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் அவருடன் புதைக்கப்பட்டுவிடும் என அரசாங்கம் எண்ணுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »