உள்நாட்டில் டொலர் இருப்புக்கான தட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கைகள் காரணமாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. வெறும் பேச்சுகளுடன் நின்றுவிடாமல் அமெரிக்காவுடன் முறையான பொருளாதார ஒப்பந்தங்களை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளிக்கிழமை (05) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தற்போது சாதகமானதாக இல்லை. நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. தற்போது டொலரின் பெறுமதி 341 ரூபாவாக உயர்ந்துள்ளதோடு, கறுப்புச் சந்தையில் அது 345 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனையாகிறது. இது அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதைக் காட்டுகிறது.
சந்தை என்பது நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்குகிறது என்பதால், அந்த நம்பிக்கை உடையும் போது சந்தையும் வீழ்ச்சியடையும். வட்டி விகிதங்களை அதிகரித்ததன் மூலம் இரண்டு மூன்று நாட்களுக்கு நிலைமை சற்றே கட்டுப்படுத்தப்பட்டாலும், தற்போது ரூபா மீண்டும் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.
இதன் பின்னணியில் பல முக்கிய காரணங்கள் உள்ளன. குறுகிய கால அடிப்படையில் திறக்கப்பட்ட கடன் கடிதங்களுக்கான தொகையை வங்கிகள் அடுத்தடுத்து வரும் வாரங்களில் செலுத்த வேண்டியுள்ளது. இதற்குத் தேவையான டொலர் இருப்பு வங்கிகளிடம் இருக்க வேண்டும். மேலும், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம், ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பில் மக்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்களும் தங்களுடைய வருவாயை நாட்டிற்குள் கொண்டு வராமல் வைத்துள்ளனர். ரூபாவின் பெறுமதியை அரசாங்கத்தால் சரியாக நிர்வகிக்க முடியும் என்ற நம்பிக்கை தற்போது பெருமளவில் சிதைந்து விட்டதே இதற்குக் காரணமாகும். மேலும், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள போர்க் சூழல் போன்ற காரணிகள் மற்ற நாடுகளைப் பாதிப்பது போல இலங்கையையும் பாதித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய கொள்கை காரணமாக இலங்கைக்கு மேலும் 2.5 சதவீத புதிய வரி விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிற நாடுகள் அமெரிக்காவுடன் பரஸ்பர ஒப்பந்தங்களை செய்து கொண்டதால் இந்த பாதிப்பில் இருந்து தப்பித்துள்ளன. இலங்கையும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்யும் என்று கூறப்பட்ட போதிலும், இதுவரை எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசாங்கம் வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல், அமெரிக்காவுடன் முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களைச் செய்து, வரவிருக்கும் கூடுதல் வரிகளில் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.
டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது நாட்டிலுள்ள அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயரும் என்ற யதார்த்த நிலை சுட்டிக்காட்டப்படுகிறது. பொருளாதாரத்தைக் கையாள்வதில் உள்ள தீவிரத்தன்மையை தற்போதைய ஜனாதிபதி ஒரு புத்திசாலி என்பதால் நிச்சயம் உணர்ந்திருப்பார். நிதியமைச்சகம் இந்த விவகாரங்களை மிகவும் சாதாரணமாகக் கையாள்வது போலக் காட்டிக் கொண்டாலும் நிலைமை மிகவும் சவாலானதாகும் என்றார்.
