Our Feeds


Thursday, June 4, 2026

Zameera

கல்முனை பாடசாலைக்கு சீன தூதுவர் விஜயம்


 சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பெற்றோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு..!



சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பெற்றோருக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கும் நிகழ்வு இன்று (04) கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ். ரிஸானா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில், இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும், பெற்றோருக்கான உலர் உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.


இந்நிகழ்வில், கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டதுடன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.


“சீன - இலங்கை சகோதரத்துவ பாசம்” எனும் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வு, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவையும் மனிதாபிமான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.


இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் கல்வி மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டி, பாடசாலை அதிபரினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


மேலும் இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


-- ஊடகப்பிரிவு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »