2023ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச்
சட்டத்தின் கீழ் சொத்து,
பொறுப்பு விபரக் கூற்றுக்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நாளை (30) என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு
நாளைக்குள்ளாக மின்னணு விபரக்கூற்று முறைமை (e-Declaration System) ஊடாகச் சமர்ப்பிப்பது கட்டாயம்
அரச சேவையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சிப் பண்புகளை வலுப்படுத்துவதே பிரதான நோக்கம்
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய, சொத்து மற்றும் பொறுப்பு விபரக் கூற்றுக்களை (Asset and Liability Declarations) சமர்ப்பிப்பதற்கான இறுதித் தினம் நாளை (30ஆம் திகதி) ஆகும் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு (CIABOC) அறிவித்துள்ளது.
இதற்கமைய, 2026 ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவடையும் காலப்பகுதிக்குள் சட்டப்பூர்வமாகத் தமது சொத்து மற்றும் பொறுப்பு விபரக் கூற்றுக்களைச் சமர்ப்பிக்கத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சட்ட விதிகளுக்கு அமைய அவர்களிடம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடாந்த விபரக் கூற்றானது, மார்ச் 31ஆம் திகதி நிலவரப்படி தமக்குரிய சொத்துக்கள், பொறுப்புக்கள், வருமானம் மற்றும் அது சார்ந்த நிதி விபரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும் என்பதுடன், அதனை 2026 ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் "மின்னணு சொத்து, பொறுப்பு விபரக்கூற்று முறைமை" (e-Declaration System) ஊடாகச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின் கீழ், இந்த விபரக் கூற்றுக்களைச் சமர்ப்பிக்கும் பணிகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழு, விபரங்களை துல்லியமாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள்ளும் வழங்குவது விபரக்கூற்றுச் சமர்ப்பிப்பிற்குப் பொறுப்பான அனைத்து அதிகாரிகளினதும் கடமையாகும் என வலியுறுத்தியுள்ளது.
அரச சேவையின் வெளிப்படைத்தன்மை (Transparency), பொறுப்புக்கூறல் (Accountability) மற்றும் நல்லாட்சிப் பண்புகளை (Principles of Good Governance) வலுப்படுத்துவதற்காகவும், ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதையுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய இந்த புதிய ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இறுதித் தினம் வரை காத்திருக்காமல், விபரக் கூற்றுக்களை விரைவாகச் சமர்ப்பிக்குமாறும், தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏதேனும் ஏற்படின் முன்கூட்டியே அதற்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் ஆணைக்குழு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
