காலி பகுதியில் திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவரை அநாகரிகமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் தாக்கப்படும் காணொளி பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெரலபனாதர, தந்தெனியாகந்த பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன், காலி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட திருட்டு முறைப்பாடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் நேற்று (03) புதன்கிழமை காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், திருட்டு சம்பவம் குறித்துப் முறைப்பாடு அளித்த தரப்பினரே தனது மகனை மனிதநேயமற்ற முறையில் கொடூரமாகத் தாக்கியதாக அச்சிறுவனின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளிப் பதிவுகளையும் ஆதாரமாகக் கொண்டு புலனாய்வாளர்கள் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.
அதன்படி, நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காலி, மிலித்துவ பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண், அவரது 47 வயதுடைய கணவர், அவர்களின் 19 வயதுடைய மகன் மற்றும் 17 வயதுடைய மகள் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று (04) வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சிறுவனால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் திருட்டுச் சம்பவம் மற்றும் அச்சிறுவன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் ஆகிய இரு வேறு சம்பவங்கள் குறித்தும் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.
