Our Feeds


Tuesday, June 9, 2026

Zameera

மலையகத்தில் மீள புனரமைக்க முடியாத வீடுகளுக்கு நிவாரணம்


 மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாவை நிவாரணமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். 


டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணத் தொகைக்கு மலையக மக்கள் தகுதிப் பெறாமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் பாராளுமன்றில் இன்று (9) கேள்வி எழுப்பினார். 


அதற்கு பதில் வழங்கிய அமைச்சர் சமந்த வித்யாரத்ன, 


அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய, சொந்த நிலம் மற்றும் வீடுகளை கொண்டவர்கள், டித்வா புயலின் போது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களது வீட்டின் முழுமையான பாதிப்புக்கு 50 இலட்சம் ரூபாயும், பகுதியளவான சேதத்திற்கு 25 இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. 


ஆனால் மலையக மக்களை பொருத்த வரையில் அவர்கள் வசிக்கும் லயன் வீடுகளோ அல்லது காணிகளோ அவர்களின் பெயரிலோ அல்லது அவர்களது உரித்துடையதற்கான ஆவணமோ இல்லை. அந்த காணிகள் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமானவை. 


எனவே அவர்களின் இந்த நிலையை கருத்திற் கொண்டு, மீண்டும் ஒரு அமைச்சரவை முடிவை எடுத்தோம். 


அதற்கமைய லயன் குடியிருப்பில் தங்கியுள்ள வீடுகள் அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்தால் 50 இலட்சம் ரூபாவையும், பகுதியளவான சேதத்திற்கான ஏனைய நிவாரணங்களையும் வழங்க தீர்மானித்தோம். 


அதற்கு மேலதிகமாக அனர்த்த முகாமைத்துவ குழுவின் ஆய்வுகளுக்கு அமைய ஏதேனும் வீடொன்று புனரமைக்க முடியாதளவு பழமையாக காணப்பட்டால் அதற்காக அவருக்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்காக 50 இலட்சம் ரூபாவை வழங்க முடிவு எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 


அதேநேரம் மலையகத்தில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய வீடுகளை அமைப்பதற்கான காணிகளை தெரிவு செய்யும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. 


சில காணிகளுக்கு இன்னும் இறுதி அனுமதி வழங்கப்படவில்லை. 


அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அனுமதியை வழங்க வேண்டும். 


ஏற்கனவே எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக மிக விரைவில் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம். 


அதனையே ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »