ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புப் படையின் ஹெலிக்கொப்டரொன்று வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவமானது, நேற்று (09) இடம்பெற்றுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் இந்த விபத்து ஈரான் படைகளின் தாக்குதலால் நடந்ததா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனவும், இது குறித்து ஆய்வு அறிக்கை பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும் ஆங்காங்கே தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகப் பிற நாட்டு கப்பல்கள் செல்வதற்கு ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருவதால், அமெரிக்கப் படைகள் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த விபத்தில், ஹெலிகொப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் காயமின்றி உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
