(க.சிவலிங்கமூர்த்தி)
நிதி பற்றாக்குறை காரணமாக நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த அனுராதபுர பல்முனை போக்குவரத்து மையத்தின் கட்டுமான பணிகள் அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் மீண்டும் செயற்படுத்தப்பட்டு விரைவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் முதற்கட்டம் கடந்த சனிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பேருந்து நிலைய பணிகளை நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன் போது வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, அனுராதபுர மாநகர முதல்வர் என். கருணாரத்ன, துணை மேயர் சீதா ஹேரத், மாநகர சபை உறுப்பினர்கள், வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் முதித் பிரசன்ன, மாநகர ஆணையர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;
பொசோன் பௌர்ணமியை முன்னிட்டு அனுராதபுரத்துக்கு வருகை தரும் இலட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு இந்த தற்காலிக ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கட்டுமானத்தில் உள்ள இந்த பல்முனை போக்குவரத்து மையத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொசோன் பௌர்ணமி காலப்பகுதியில் நகர மையத்தில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகள் வசதிகளை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன், பயணிகள் சேவையை விரைவுபடுத்தும் நோக்கில் "டச் அண்ட் கோ'' முறையின் கீழ் பேருந்துகளில் இருந்து பயணிகள் குறுகிய நேரத்தில் இறங்கி மீண்டும் தங்களது பயணத்தை தொடரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்து இயக்க நேரம் குறைக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி பற்றாக்குறை காரணமாக ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த திட்டம், தற்போதைய அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் மீண்டும் செயற்படுத்தப்பட்டு கட்டுமான பணிகள் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது. தொடக்கத்தில் சுமார் 1100 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்த இந்த திட்டத்தின் செலவு, பின்னர் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் பணிகள் நிறுத்தப்பட்ட காலப்பகுதி காரணமாக சுமார் 2400 மில்லியன் ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் திட்டச் செலவுகள் மீளாய்வு செய்யப்பட்டு, பொதுமக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திட்ட மேலாண்மை மீண்டும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆலோசக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில், இந்த பல்முனை போக்குவரத்து மையத்தின் முழு கட்டுமான பணிகளும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்து பொதுமக்களுக்கு முழுமையாக ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த போக்குவரத்து மையத்தில் பயணிகளுக்காக பல நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அணுகல் பாதைகள், சக்கர நாற்காலி பயணிகளுக்கான வசதிகள் மற்றும் தனி சுகாதார வசதிகள், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் நடைமேம்பாலம், மின்தூக்கிகள் மற்றும் மின்படிகள், 24 மணி நேர ஏடிஎம் வசதி, பயணிகளுக்கான ஓய்வு அறைகள், தரமான உணவகங்கள் மற்றும் வணிக நிலையங்கள், தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், நவீன சுகாதார வசதிகள், நீண்ட ரயில்களை நிறுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட மேடைகள் மற்றும் தானாக இயங்கும் மின்ஜெனரேட்டர் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளன.
பொசோன் பௌர்ணமியை முன்னிட்டு அனுராதபுர நகரின் போக்குவரத்து ஒழுங்குமுறையை மேம்படுத்தும் முக்கிய கட்டமைப்பு நடவடிக்கையாக இந்த தற்காலிக திறப்பு கருதப்படுகின்றது. இந்த நடவடிக்கை மூலம் நகரில் ஏற்படும் பயணிகள் நெரிசலை குறைத்து, பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்து சேவையை உறுதி செய்யும் நோக்கம் நிலவுகின்றது என்றார்.
