Our Feeds


Friday, June 5, 2026

SHAHNI RAMEES

பாடகர் சங்கீதன் கைது தொடர்பில் அநுரவின் கட்சி MP கடும் அதிருப்தி!


சில பாடல்கள் கலை வெளிப்பாடுகளை மட்டுமே

அடிப்படையாகக் கொண்டு ஆயுதவாதத்தை உருவாக்குகின்றன என வாதிடுவது யதார்த்தத்திற்குப் புறம்பான அணுகுமுறையாகும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார்.


பாடல் உருவாக்கம் தொடர்பில் இடம்பெற்ற கைது நடவடிக்கை தொடர்பில் தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுர இலங்கையில் மீண்டும் யுத்த சூழ்நிலை உருவாகாது எனவும், விடுதலைப்புலிகள் போன்ற ஆயுத இயக்கங்கள் மீள உருவாகும் வாய்ப்பு இல்லை எனவும் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சில பாடல்கள் அல்லது கலை வெளிப்பாடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவை ஆயுதவாதத்தை உருவாக்குகின்றன என வாதிடுவது யதார்த்தத்திற்குப் புறம்பான அணுகுமுறையாகும்.



கலை, இலக்கியம் மற்றும் இசை என்பவை மக்களின் வரலாறு, நினைவுகள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களை வெளிப்படுத்தும் சமூகப் பிரதிபலிப்புகளாகும். அவற்றை குற்றம்சாட்டுவதற்குப் பதிலாக, அவை தோன்றுவதற்கான சமூக மற்றும் அரசியல் பின்னணிகளைப் புரிந்துகொள்வதே முக்கியமானதாகும்.


தமிழ் மக்கள் இன்னும் பல தீர்க்கப்படாத பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். காணி, காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் அதிகாரப் பகிர்வு, பொருளாதார முன்னேற்றம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விடயங்களில் நியாயமான தீர்வுகள் தேவைப்படுகின்றன. இவ்வாறான அடிப்படைப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படாதவரை, மக்களின் உணர்வுகள், நினைவுகள் மற்றும் அவற்றின் கலை வெளிப்பாடுகள் தொடர்ந்து வெளிப்படுவது இயல்பான ஒன்றாகும்.


எனவே, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிதலையும் வலுப்படுத்தும் நோக்கில், எந்தவொரு தரப்பினரும் தேவையற்ற சர்ச்சைகள் அல்லது உணர்ச்சி தூண்டல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பணிகளில் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும். அதுவே நிலையான சமாதானத்திற்கும் தேசிய ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »