Our Feeds


Monday, June 29, 2026

Zameera

'Tell IGP' சேவை 24 மணி நேரமும் விரிவுபடுத்தப்பட்டது – பொலிஸார்


 பொதுமக்களின் தேவைகளை விரைவாக நிறைவேற்றும் நோக்குடன், 'பொலிஸ் மா அதிபரிடம் கூறுங்கள்' (Tell IGP) என்ற விசேட திட்டம் 2026 ஆம் ஆண்டில் மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் மறுசீரமைக்கப்பட்டு, பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


கொழும்பு 2 இல் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் பிரதான காரியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள இச்சேவை மையம், 24 மணித்தியாலமும் இயங்கி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள பிரஜைகள் மாத்திரமன்றி, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இலங்கையில் ஏதேனும் ஒரு பொலிஸ் பிரிவின் சேவையைப் பெற விரும்பும் வெளிநாட்டுப் பிரஜைகளும் நிகழ்நிலை மூலமாகத் தங்களின் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.Travel 


முழுமையாக நிகழ்நிலையில் இயங்கும் இச்சேவையினைப் பொதுமக்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெற முடியும். அதேபோன்று, நாட்டில் உள்ள ஒவரோ அல்லது வெளிநாட்டுப் பிரஜை ஒருவர தங்களின் பெயரைக் குறிப்பிட்டோ அல்லது பெயர் குறிப்பிடாமலோ மிக முக்கியமான மற்றும் இரகசியமான தகவல்களை இத்திட்டத்தின் ஊடாக பொலிஸாருக்கு வழங்க முடியும். குறிப்பாக, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மூலம் நாட்டினுள் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் பாதாள உலகக் குழு செயல்பாடுகள் குறித்து வழங்கப்படும் தகவல்களை நாம் பெரிதும் வரவேற்கிறோம்.


பொதுமக்களும் தமது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் குற்றங்கள், சிவில் தகராறுகள், போக்குவரத்து விதிமீறல்கள், ஊழல் மோசடிகள் அல்லது பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்கள் குறித்தும் இதன் ஊடாக பொலிஸ் மா அதிபருக்குத் தெரியப்படுத்தலாம். இந்த மறுசீரமைக்கப்பட்ட புதிய கட்டமைப்புக்கு அமைய, உங்களின் முறைப்பாடுகள் குறித்த பொலிஸ் வலயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் ஊடாக, சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாகக் கொண்டு சேர்க்கப்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும்.


பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நியாயமான நீதி கிடைக்கவில்லை என்று கருதினால், அந்த அநீதி குறித்தும் இதன்மூலம் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். எனவே, பொதுமக்கள் எவ்வித பயமும் தாமதமுமின்றி தங்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறான முறைப்பாடுகள் அனைத்தும் உடனடியாகப் பதிவு செய்யப்பட்டு, அடுத்தகட்ட விசாரணைகளுக்கான ஆரம்பப் புள்ளியாகப் பயன்படுத்தப்படும்.


இச்சேவையை நாடளாவிய ரீதியில் மேலும் வலுப்படுத்துவதற்காக, 48 பொலிஸ் வலயங்கள் உட்பட அனைத்துப் பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட கணினிப் பயிற்சியளிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


பொதுமக்கள் இச்சேவையைப் பயன்படுத்துவதற்கு www.police.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று, அங்குள்ள ‘E-Services’ (ஈ-சேவைகள்) என்ற பக்கத்தில் உள்ள ‘Tell IGP’ என்பதற்குள் நுளைந்து தங்களின் முறைப்பாடுகளையும், அவற்றுடன் இணைக்க வேண்டிய ஏதேனும் ஆவணங்கள் அல்லது புகைப்படங்கள் இருப்பின் அவற்றையும் பதிவேற்றி சமர்ப்பிக்க முடியும். பொதுமக்கள் தங்களின் தேவைகளை விரைவாகவும் இலகுவாகவும் பூர்த்தி செய்து கொள்வதற்காகவே பொலிஸார் இச்சேவையை அர்ப்பணிப்புடன் வழங்கி வருகின்றனர் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »