Our Feeds


Monday, June 29, 2026

Zameera

இன, மத ஒற்றுமைக்கு அரசு உறுதி – விஜித ஹேரத்



 


குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய கடந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அனைத்து இன மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒழுக்கமான மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என  வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்  விஜித ஹேரத் தெரிவித்தார். Politics

அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தின் 76ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (28) கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் நடைபெற்றது. அதில்  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்தது. பல வருட கால கசப்பான யுத்தத்திற்குப் பின்னர், நாட்டை தேசிய ஒற்றுமையுடன் கட்டியெழுப்புவதற்கு எமக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிகளில் மிகவும் திட்டமிட்ட வகையில் இனவாதமும் மதவாதமும் தூண்டப்பட்டு நாடு மீண்டும் பிளவுபடுத்தப்பட்டது.

ஆனால், 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு இவ்வாறான எந்தவொரு இனவாதம் அல்லது மதவாத மோதல்களுக்கு இடமில்லை , நாட்டின் பொருளாதாரம், ஒழுக்கம், சட்டம் மற்றும் நாகரிகத்தை கட்டியெழுப்புவதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் மற்றும் மலாய் என நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ வேண்டும்.


முஸ்லிமாக இருந்தாலும் சரி, சிங்களவராக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் மனிதர்கள், எம்மிடையே எந்த வேறுபாடும் இல்லை. மொழி, மதம், சாதி அல்லது வேறு எந்தப் பாகுபாடும் இன்றி நாம் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகளைப் போல ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

அத்துடன், 70 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளனம் நாட்டின் அனைத்து இன மக்களுக்காகவும் பல சேவைகளை மேற்கொண்டு வந்திருக்கிறது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சூறாவளி நிலையின்போது, மாத்தறை மற்றும் காலியிலிருந்து வந்த முஸ்லிம் இளைஞர் குழுக்கள், தமக்கு அறிமுகமில்லாத பதுளை மற்றும் மல்வானை போன்ற பிரதேசங்களுக்குச் சென்று, தாமாக முன்வந்து நிவாரணப் பணிகளை வழங்கியதன் மூலம், இஸ்லாம் போதிக்கும் சகோதரத்துவத்தை சமூகத்திற்கு நடைமுறையில் வெளிப்படுத்தியிருக்கிறது  என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »