Our Feeds


Tuesday, July 7, 2026

Zameera

வாகன விபத்துக்களில் 1,424 பேர் உயிரிழப்பு


 இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 05 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,355 உயிராபத்துக்களை ஏற்படுத்தும் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

தேசிய விபத்து தடுப்பு வாரம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இம்முறை மொத்த வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 108 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆகவும் அதிகரித்துள்ளதால், இது மிகவும் பாரதூரமான நிலை என அவர் சுட்டிக்காட்டினார்.

வீதி விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கு சாரதிகளின் கவனயீனம், அஜாக்கிரதை, அதிக வேகம், வீதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் வாகனங்களைச் சரியாகப் பராமரிக்காமை காரணமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் பிரதான காரணங்களாகும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

மேலும், தற்போதைய புள்ளிவிபரங்களின்படி, இந்த விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, கடந்த 7 மாத காலப்பகுதியில் மட்டும் 488 மோட்டார் சைக்கிள் சாரதிகளும், 484 பாதசாரிகளும் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »