கடந்த 2019 ஆம் ஆண்டு வீரக்கெட்டியவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் நடைபெற்ற, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தைச் செலுத்தத் தவறியமையினூடாக பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (24) உத்தரவிட்டது.
இம்மனு ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதியரசர்கள் அமர்வு, இலங்கை மின்சார சபை தற்போது மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அதற்குரிய அங்கத்துவ நிறுவனத்தை இம்மனுவின் பிரதிவாதியாகப் பெயரிடுவதுக்கு மனுதாரர் தரப்புக்கு அனுமதி வழங்கியதுடன், மனுவை டிசம்பர் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் திகதி குறித்தது.South Asians & Diaspora
சட்டத்தரணி விஜித குமாரவினால் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண விழா 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை வீரக்கெட்டியவிலுள்ள வீட்டில் நடைபெற்றதாகவும், அதற்காகப் பெறப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் 2,682,246.57 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்காலப்பகுதியில் குறித்த வீட்டிற்கும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாதுகாப்பு மின்விளக்குகளை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு அமைவாக மின்சாரத்தை வழங்குமாறும், அதற்கான கட்டணத்தை ராஜபக்ஷ குடும்பத்தினர் செலுத்துவர் என்றும் மின்சார சபை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை அக்கட்டணம் செலுத்தப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமான வாடிக்கையாளரான தனது வீட்டில் 7,390 ரூபா மாதாந்த மின் கட்டணம் செலுத்தப்படாததால் மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, இவ்வளவு பெரிய தொகையைக் செலுத்தாத போதிலும் வீரக்கெட்டிய வீட்டின் மின் இணைப்பைத் துண்டிக்காமை சட்டத்தின் முன் சமத்துவமின்மையை வெளிப்படுத்துவதாகவும், இதன் மூலம் அரசியலமைப்பின் 12(1) சரத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் திருமண விழாவிற்கான மின்சாரக் கட்டணத்தை தாம் செலுத்திவிட்டதாக உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மனுதாரர் சார்பில் சட்டத்தரணி திஷ்ய வேரகொட நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
