தடுப்புக் காவல் உத்தரவுக்கமைய குற்றப்புலனாய்வுத்
திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தபோது அங்கிருந்து தப்பிச் செல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டி ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (30) வியாழக்கிழமை தீர்மானித்துள்ளது.எனினும், பிரதிவாதிகள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தொடர்வதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் மேல் நீதிமன்றத்தின் உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட முதற்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்டு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
இவ்வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜாலிய சமரசிங்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர். டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் முதற்கட்ட ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், பிரதிவாரி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், எனது சேவைபெறுநருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 2(1)(அ) பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள போதிலும், அவர்கள் புரிந்த குற்றம் என்னவென்பதை முறைப்பாட்டாளர் தரப்பு திட்டவட்டமாகக் குறிப்பிடவில்லை எனவும், எனவே அக் குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது எனவும் மன்றில் சுட்டி காட்டியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த அரசத் தரப்பு சட்டத்தரணி, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குள் அடங்குமா இல்லையா என்பதை வழக்கு விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும் சாட்சியங்களின் அடிப்படையில் மாத்திரமே நீதிமன்றம் தீர்மானிக்க முடியும் எனவும், சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் செல்லுபடியாகும் தன்மையை நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
மன்றில் முன்வைக்கப்பட்ட இருதரப்பு சாட்சியங்களையும் பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல, முன்வைக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது எனவும், ஆனால் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் வழக்கை முன்னெடுப்பதில் தடையுமில்லை எனவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அடுத்து பிரதிவாதிகள் தரப்பினால் பிணை கோரும் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான உத்தரவு வரும் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
இவ்வழக்கில் 'ஹரக் கட்டா' எனப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ரவிந்து சந்தீப குணசேகர, தினேஷ் தரங்க, 'மிதிகம ருவன்' எனப்படும் ருவன் சாமர மற்றும் சஞ்சய அபேசிங்க ஆகிய ஐவர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இவர்கள் அனைவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
