இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெய்து வரும் பலத்த மழையினால் மாங்குர்த் பகுதியில் நேற்று (5) ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து சிறுவர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மாங்குர்த் ஜனதா நகர் சால் பகுதியில் இருந்த மூன்று அடுக்குமாடிக் குடியிருப்பின் 2 முதல் 3 வீடுகள் நேற்றைய தினம் இரவு 8:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்ததாகப் பிரஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் மும்பை தீயணைப்புப் படையினர், பொலிஸார், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 32 வயதுடைய பெண் ஒருவரும், 2 முதல் 14 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்களும் உயிரிழந்துள்ளதோடு, 24 வயதுடைய இளைஞர் ஒருவரின் நிலைமை தற்போது சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு மகாராஷ்டிர முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் தானும், அரசும் பங்கெடுப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
