இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (03) கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி, அத்மிரல் ஒஃப் த ப்ளீட் (Admiral of the Fleet) வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
முன்னாள் கடற்படைத் தளபதி, சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று முற்பகல் 10.05 மணியளவில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அந்த ஆணைக்குழு வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
2006ஆம் ஆண்டு கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு கடற்படை அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் போது, உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்காத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவை அந்தப் பதவிக்கு இணைத்துக்கொண்டமை அவர் மீதான ஒரு குற்றச்சாட்டாகும்.
அக்காலத்தில் காணப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக, அரசாங்கப் பணத்தைச் செலவழித்து யோஷித ராஜபக்ஷவுக்கு பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியில் பயிற்சிப் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமை மற்றைய குற்றச்சாட்டாகும்.
