Our Feeds


Friday, July 10, 2026

Zameera

பணத் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலத்தில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது


 புதிய ‘பணத் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலத்தின்’ கீழ் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரங்கள், நாட்டில் ஊழல் மோசடிகளை மேலும் தீவிரப்படுத்தும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.


பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (09) அன்று நடைபெற்ற ‘பணத் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்’, ‘நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம்’ மற்றும் ‘பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டமூலம்’ மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


கறுப்புப் பணச் சுத்திகரிப்பைத் தடுப்பதற்கும், ஊழல் எதிர்ப்புச் சட்டங்களைப் பலப்படுத்துவதற்கும் நாங்கள் ஆதரவாகவே இருக்கிறோம். இருப்பினும், இந்தச் சட்டமூலத்தில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.


“இந்தச் சட்டத்தின் பிரகாரம், எவரேனும் ஒருவரின் சொத்தை முதற்கட்டமாக 14 நாட்களுக்கும், பின்னர் 21 நாட்களுக்கும் முடக்கப் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இதற்கு நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்பது மிகவும் ஆபத்தானது” என அவர் சுட்டிக்காட்டினார்.


நிதி கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டமூலத்தின் 24 ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்படும் குழு, பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை என்றும், அமைச்சரவைக்கு மாத்திரமே அறிக்கையிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முறையற்றது என அவர் தெரிவித்தார்.


வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் தொடர்ச்சியாகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கெடுபிடிகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், பொலிஸாரின் சந்தேகத்தின் அடிப்படையில் மக்களின் சொத்துக்கள் மாதக்கணக்கில் முடக்கப்படும் அபாயம் உள்ளது.


“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எப்போதும் ஆட்சியில் இருக்கப்போவதில்லை. எதிர்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்கள் இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, இந்த அதிகாரங்களை நீதிமன்றத்திடம் வழங்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.


கடந்த காலங்களில் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் போது, புதிய ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் வழங்காமல் நீதிமன்றங்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்குமாறு தாங்கள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்க உறுப்பினர்களும் அன்று ஆதரித்ததை அவர் நினைவூட்டினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »